பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்; ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை." வானந் துளங்கிலென்? மண்கம்ப மாகில்என்? மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறில்என்? தண்கடலும் மீனம் படில்என்? விரிசுடர் விழில்என்? வேலை நஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே." என்ற அப்பர் திருமொழிகளை ஆழ்ந்து நோக்கின் இது நன்கு புலனாகும். ஆகவே, உலகியல்பற்றிய விருப்பு வெறுப்பு இவர்கட்கு உண்டாதல் இல்லை. ஆயினும் எவையேனும் சில விருப்பச் செயல்கள் நிகழ்வதாயின், அதுவே இறைவன் உயிர்களை உய்விக்க வேண்டி எழுந்தருளியிருக்கும் திருக் கோயில்கட்குச் சென்று வணங்குதல், அவற்றிற்கு ஆவன வற்றைச் செய்தல், மெய்யடியார்களுடன்கூடி இறைவனது புகழ்பாடி இன்புறுதல் - இவை யெல்லாம் இவர்கள் தம் இயல்பில் செய்யினும் இவை உலகிற்கு நலந்தருவனவாய் அமையும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய தோத்திரப்பாடல்கள் இவ்வாறு எழுந்தனவேயாகும். இனி, தாம் பெற்ற இன்பத்தை உலகனைத்தும் பெற வேண்டும் என்னும் கருணையும் ஒவ்வொரு சமயத்தில் இவர்தம் உள்ளத்தில் எழுவதுண்டு. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்." என்ற திருமூலரின் திருவாக்கினை 42. மேலது 6.98:1 - 43. மேலது 4.122:8 44. திருமந்.பாயிரம்-11