பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 365 யோகத்தில் நிற்போர் யோகியரது உள்ளங்களிலே அவர்கட்கு அவர்கருதும் வடிவில் காட்சியளிக்கின்ற அப் பெருமானே இங்கும் இவ்வடிவில் விளங்குகின்றான்' எனக்கொண்டு வழிபடுவர். இவர்கட்குச் சிவபெருமான் கன்றை நினைந்த பசுவின் மடியில் பால் தானே விம்மி ஒழுகுதல்போல் அக்கருத்தின்வழி வெளிப்பட்டு அருள் புரிவன். ஞானியர் எப்பொருளிலும் ஒழிவர நிறைந்து நிற்கும் இறைவன் தான் விளங்கி நின்று அருள் செய்தற் பொருட்டுக் கொண்ட இவ்விடங்களிலும் அவ்வாறு நிற்கின்றான் என்று அவன் அருள் வழியில் வழிபடுவர். இவர்கட்கும் சிவபெரு மான் தானே இனிது வெளிப்பட்டு அருள்புரிவான். மேற்கூறிய வழிபாடு தோற்றத்தில் ஒன்றுபோல் காணப்படினும், கருத்திலும் பயனிலும் பெரிதும் வேறு பட்டு நிற்கும் என்பது ஒர்ந்து உணரப்படும். ஆகவே, சைவ சித்தாந்தத்தில் தொடக்கம் முதல் இறுதிவரையில் எந்நிலையிலும் திருநீறு உருத்திராக்கம், திருவைந்தெழுத்து என்பவற்றுடன் குருலிங்க சங்கம வழி பாடும் யாவர்க்கும் உய்தி தரும் சாதனங்களாகக் கூறப்படுவன வாகும் என்பது உணர்ந்து தெளியப்படும். நாமும் அவற்றையே பற்றி நின்று பிறவித்துன்பத்தினின்றும் நீங்கி இறைவன் திருவடிப் பேரின்பத்தினைப் பெற்று வாழ்வோம். 'சிவாய நம’ என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே: மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதிஆய் விடும்.' என்ற பாட்டியின் வாக்கு நினைவுடன் இப்பகுதி நிறைவு பெறுகின்றது. 73. நல்வழி-15