பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள் - 31 விசும்பில் எழுந்தது. உடனே சுவாமிகளிடம் எல்லோரும் போய் வணங்கிச் செய்தியைத் தெரிவித்தனர். சுவாமிகளும், அப்படியே விரைவில் தில்லைக்கேகி கொடிக்கவி என்னும் அழகிய சிறு நூலிலுள்ள முதற்பாட்டைப் பாடியவுடன் கொடி தானாக ஏறிற்று. - சுவாமிகள் சிவப்பிரகாசம் என்னும் சிவஞான போதச் சார்பு நூலொன்றும், உண்மை நெறி விளக்கம், நெஞ்சு விடுதூது, வினா வெண்பா, திருவருட்பயன்', 'சங்கற்ப நிராகரணம், போற்றிப் பஃறொடை என்னும் பிற ஏழு நூல்களும் இயற்றியருளினார்கள். கோவிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக்கோவை முதலியனவும் இவரால் இயற்றப் பெற்றனவாகக் கருதுவோரும் உண்டு. வடமொழியில் பெளடகம் என்னும் உபாகமத்திற்கு இவர் இயற்றிய விரிவுரை ஒன்று உண்டு. சீடர்கட்கு ஞானநூல் கற்பித்தலும், பதி நூல் இயற்றுதலும், தக்கவர்க்கு முத்திப் பேறு உதவுதலும் ஆகிய பேருபகாரங்களைச் செய்தலையே தமது கடமையாகக் கொண்டிருந்து பின் சமாதி நிலையில் நின்று சித்திரை அத்த நாளில் சிவபெருமானோடு இரண்டறக் கலந்தனர்.