பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தத்துவங்கள் - 1 (பதி)

53


லுடைமையால் நிறைவேறுகின்றது. உயிர்கள் இம்மை மறுமை, வீடு என்றும் நலன்களைப் பெறுதலே முதல்வனது தொழிலின் பயனாகும் என்பது ஈண்டு உளங்கொள்ளத் தக்கது.

ஐயாநீ யாட்கொண் டருளும் விளையாட்டில்
உற்றவர்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்’

என்ற வாதவூரடிகளின் திருமொழி இதற்குச் சான்றாகும். இதனால் கைம்மாறு கருதாத கருணையே முதல்வன் தொழில் செய்வதற்குக் காரணம் என்பது தெளிவு. கருணாநிதி’, ‘கருணாகரன்-என்பனபோன்ற திருப்பெயர்களைக் கருதலாம்.

படைத்தல். உலகம் சடம் அறிவில்லாதது. உயிர், சித்து, அறிவுடையது. உலகில் நேரிடும் நன்மை தீமைகள் அறிவுடைய பொருளுக்கன்றி அறிவில்லாத பொருளுக்கில்லை. ஆகவே, அறிவில்லாத உலகினை அறிவுடைய ஆருயிர்கட்குத் துணையாகும் வகையில் அமைத்து இரண்டினையும் ஒன்றுபடப் பிணைத்து வைப்பதே படைத்தல் என்ற தொழிலாகும்.


'உயிர்கட்குத் துணையாகும் வகை' என்பது, அவை விரும்பும் விருப்பம். இவ்விருப்பம் எண்ணிறந்தவையாயினும் அவை இம்மை, மறுமை, வீடு' என்ற மூன்றில் அடங்கும். சில உயிர்கள் இம்மையிலேயே மூழ்கிக் கிடக்கும்; சில மறுமையில் நாட்டம் கொள்ளும் சில வீட்டின்பத்தில் அவாவுடையனவாயிருக்கும். இவற்றையெல்லாம் உயிர்கள் உடம்பின்றி அடைதல் இயலாது. ஆகவே உயிர்களின் விருப்பத்திற்கேற்ப, உடம்பு முதலியவற்றை உயிருக்கு அமைத்துக் கொடுத்தலே படைப்பு என்பதாகின்றது என்பது தெளிவு. அப்பர் அடிகளும்

28. திருவா. திருவெம், 11 அடி - 1 தொழில் ஆற்றுதல் இறைவனுக்கு விளையாட்டு போன்றது.