பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எந்நாட்டவர்க்கும் இறைவனானவன் தென்னாட்டில் சிவன் எனப் போற்றப்பெற்றான். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு திகழும் சைவ சமயம் சங்க காலத்தில் தமிழ்நாட்டில் கால்கொண்டு திகழ்ந்தது. அச்சமயத்தின் தத்துவக் கருத்துகளை விளக்குமுகத்தான் எழுந்ததே சைவசித்தாந்தம் என்னும் துறையாகும். இந்திய நாட்டில் எத்தனையோ மெய்ப்பொருள் தத்துவங்கள் தோன்றியிருப்பினும் 'அகம் பிரம்மாஸ்மி’ என்னும் நானே கடவுள் என்கிற வேத தத்துவம் தமிழகம் தவிர இந்திய நாட்டின் பிற பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது. சைவ சமயம் தமிழகத்தில் பரவியுள்ளது போல் கர்நாடக மாநிலத்திலும் காசுமீர நாட்டிலும் பரவியிருந்தாலும் அங்கே அது வீரசைவமாகவே நிலவி வருகின்றது. - சைவசித்தாந்தம் அடிப்படையில் இறைவன் (பதி), உயிர் (பசு), தளை (பாசம்) என்ற முப்பொருள் உண்மையின் அடிப்படையில் எழுந்தது. உலகில் உள்ள எல்லாச் சமயங்களும் உயிர்களை இறைவன் படைத்தான் எனக் கூறும். ஆனால் சைவசித்தாந்தம் மட்டும் இறைவன் எவ்வளவு பழமையானவனோ அவ்வளவு உயிர்களும் பழமையானவை. அதுபோலவே தளைகளும் பழமையானவை. பதி, பசு, பாசம் அனாதி இம் முப்பொருள் கொள்கையை விளக்க எழுந்த நூல்களே ‘பதினான்கு சாத்திரம் என்று சைவப் பெருமக்களால் வழங்கப்படுகிறது.