பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவஞானபோதம்

சிவஞானபோதம்


இந்நூல். ஒவ்வொரு அதிகாரமும் இரண்டு இயல்களைக் கொண்டது. ஒவ்வொரு இயலும் மூன்று நூற்பாக்களை கொண்டது. பொது அதிகாரம் பிரமாண இயல், இலக்கண இயல் என்னும் இரண்டையும் உண்மை அதிகாரம் சாதன இயல், பயனியல் என்னும் இரண்டையும் உடையது. ஒவ்வொரு இயலுக்கும் 3 நூற்பாக்கள் உண்டு. பொது அதிகாரம் 6 பாக்களையும் உண்மை அதிகாரம் 6 பாக்களையுங் கொண்டது.

4) நுவல்பொருள்: பொதுவாக, முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் பற்றி உரைப்பது, சிறப்பாக நூற்பா. வரிசைப்படி உரைக்கப்படும் பொருளாவது, 1) காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத முதல்வனின் உண்மை நிறுவப்படுகிறது. இது வள்ளுவர் காட்டிய நெறி 2) இருவினை உண்மை பறைசாற்றப்படுகின்றது. 3) ஆன்மா உண்டு. 4) உயிர் இயல்பு கூறப்படுகிறது 5) அவ்வுயிர் முதல்வனால் அறியப்படுகின்றது. 6) முதல்வன் வாக்கு, மனம் முதலியவற்றால் அறியப்படாதவன், அருட்கண்ணினாலேயே அறியப்படுவன். 7) முதல்வனை அறிவித்தற்குரிய தகுதி உயிருக்கே உண்டு. 8) முதல்வனே குருவாக வந்து உயிருக்குத் தன்னை உணரும் திறத்தை உணர்த்துவான். 9) அருளுரைப் பொருளை உன்னும் நெறி உணர்த்தப்படுகிறது. 10) திருவருள் வழி நின்றால், வினையும் வினையால் வரும் துன்பமும் நீங்கும் 11) முதல்வனிடத்து அன்புசெலுத்தினால், வீடுபேறு எய்தலாம். 12)இறையறிவு எய்திய போதும், இன்றியமையாதவை அடியார் வழிபாடும் ஆலய வழிபாடுமாகும். - உணர்தல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், ஒன்றி ஒழுகுதல் என்னும் நான்கு வகை நெறிகளால் உணரல். இருப்பினும், குரு மூலம் பயிலுதலே நன்று. உரை:பாண்டிப் பெருமாள் விருத்தியுரை உண்டு. சிவஞான முனிவர் அருளிய சிற்றுரை, பேருரை என்னும் உரைகளும் உண்டு. உமாபதி சிவம் முதலியோரும் உரை எழுதியுள்ளனர். இவற்றில் சிறந்தவை சிற்றுரையும் பேருரையுமே ஆகும்.

சிறப்புகள்:

1) குறள் போன்று மிகச் சுருக்கமாக அமைந்து முப்பொருள் உண்மையை விளக்குவது. 2) சைவம் சாராப் பிற மதங்களை அளவை இயல் முறையில் அருந்திறத்தோடு சற்காரிய வாதத்தைக் கொண்டு மறுப்பது தனிச் சிறப்பு. 3) தத்துவத்தையும் தமிழால் தெள்ளிதின் விளக்க இயலும் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

4) அத்துவிதம் அதன் உண்மைப் பொருளால் விளக்கப்படுகிறது.

118