பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்ம அவத்தை

ஆன்மக் கொள்கைகள்


மத்திய அவத்தையில் தொழிற் படுங்கருவிகள் :

1.இதில் சாக்கிர சாக்கிரத்தில் சிவத்துவம் முதல் வித்யா தத்துவம் (சுத்தா) இறுதியாக ஐந்து கருவிகள் செயற்படும்.

2.சாக்கிர சொப்பனத்தில் சிவ தத்துவம் முதல் ஈசுவரதத்துவம் இறுதியாக நான்கு கருவிகள் செயற்படும்.

3.சாக்கிர கழுத்தியில் சிவ தத்துவம் முதல் சதாக்கிய தத்துவம் இறுதியாகிய மூன்று கருவிகள் செயற்படும்.

4. சாக்கிர துரியத்தில் சிவ தத்துவம் சத்திதத்துவம் என்னும் இரு கருவிகள் செயற்படும்.

5. சாக்கிர துரியா தீதத்தில் சிவ தத்துவம் என்னும் ஒரு கருவி மட்டும் செயற்படும்.

நின்மல வகை

1.நின்மலசாக்கிரம்: இதுநின்மல அவத்தைக் குரியது. ஆசிரியராலே ஞான தீக்கை பெற்று, முப்பொருள் உண்மையறிந்து, சிந்தித்துத் தெளிந்து கருவிகள் நீங்கும்படி ஆராய்ந்து நிற்கும் நிலை இது.

2.நின்மல சொப்பனம்: கருவிகள் நீங்கியும் நீங்காமலும் நடுவே சாற்றுப் பதைப்பு ஏற்படும் நிலை இது

3.நின்மல சுழுத்தி: தத்துவங்கள் நீங்கி மேலான கேவலத்தில் நிற்கும் நிலை இது.

4.நின்மல துரியம் : கேவலம் நீங்கி, அருளாலே தன்னையுங்கண்டு அருளையுங்கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை இது.

5.நின்மலதுரியாதீதம்: சிவத்தைக் கண்டு சிவப்பேரின் பத்தில் மூழ்கும் இறுதி நிலை இது. பா: அவத்தை

ஆன்மஇலக்கணம்-ஆன்மாவின் இயல்பு பொது, சிறப்பு என இருவகை. அஞ்சவத்தைப் படுதல் பொது இலக்கணம். சத்தை அடைவதற்குரிய உரிமை உண்டு என்னும் அறிவுடைமையே சிறப்பிலக்கணம்

ஆன்ம இலாபம் - ஆன்ம ஆதாயம் இது மாயப்பிறப்பை அறுத்து முத்தி பெறுதல்.

ஆன்மக்கொள்கைகள்- இவை ஒன்பதும் பின் வருமாறு.

1.மனமே ஆன்மா. இக்கொள்கை உடையவர் அந்தக்கரண ஆன்மவாதி.

2.ஆன்மா ஒன்றே. இக்கொள்கை உடையவர் ஏகான்மவாதி.

3.இந்திரியமே (பொறி) ஆன்மா. இக்கொள்கை உடையவர் இந்திரியான்மாவாதி.

4.ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.

5.சூனியமே (இன்மை) ஆன்மா. இக்கொள்கை உடையவர் சூனிய ஆன்மவாதி.

6.உயிர்வளியே ஆன்மா. இக்கொள்கை உடையவர் பிராணான்மாவாதி.

7.விஞ்ஞானமே ஆன்மா. இக்கொள்கை யோகசாரன் கொள்கை ஆகும்.

8.ஆன்மா சடப் பொருள். இக்கொள்கை வைசேடிகர் கொள்கை.

9.ஆன்மா ஆனந்தமடைவதே முத்தி. இக்கொள்கை உடையவர் ஆனந்த ஆன்மவாதி.

44