பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

சைவசித்தாந்தம் தலைசிறந்த தமிழ் மெய்யறிவு ஆகும். இம்மெய்யறிவு குறித்துத் தமிழில் முறையானதும் முழுதுமான அகராதி இல்லை. இக்குறையை நிறைவு செய்யவே இவ்வகராதி இப்பொழுது வெளியிடப்படுகிறது.

சைவசித்தாந்த நூல்கள் (மெய்கண்ட நூல்கள்) 14இல் தலைசிறந்தது சிவஞான போதமே. ஏனைய பதின்மூன்றும் அதன் அடி ஒற்றிச் செல்வனவே. இப்பதினான்கு நூல்களிலுள்ள இன்றியமையாச் சொற்கள் திரட்டப்பட்டு, அவை இவ்வகராதியில் விளக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு விளக்கப்படுவது பின்வரும் நிலைகளில் அமைகின்றன.
1. அடிப்படைக் கருத்துகள்.
2. கொள்கை விளக்கமும் கொள்கை மறுப்பும்
3. ஆசிரியர்கள் வரலாறு
4. நாயன்மார்கள் வரலாறு
5. திருவிழாக்கள்
6. இன்றியமையா இடஞ்சுட்டுக் குறிப்புகள்
7. இன்ன பிற அரிய குறிப்புகள்.

அகராதியின் தனிச்சிறப்பே எந்த ஒரு பதிவையும் நினைத்த அளவில் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருப்பதே. அவ்வகையில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பதிவுச் சொற்கள் அனைத்தும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுடனும் விளக்கப்பட்டுள்ளன . சுருக்கம், தெளிவு, செறிவு, அறிவியல், செம்மை ஆகியவை இவ்வகராதியின் சிறப்புகள் ஆகும். ஆங்காங்கு அறிய அட்டவணைகள் உயரிய கருத்துக்களின் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

V