பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


நாவலந் தீவில் தோன்றி வளர்ந்த சமயங்களுள் தொன்மையும் முதன்மையும் பெற்று விளங்குவது சைவசமயமாகும். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் விளங்கும் செம்பொருளாகிய சிவபரம்பொருளைச் சிவம் என வழங்குதல் தமிழ் மரபாகும். 'சிந்தனைக்கரிய சிவமே போற்றி' எனவரும் திருவாசகத் தொடர் இம்மரபினை வலியுறுத்தல் காணலாம். 'செம்பொருளாய சிவமெனலாமே' எனவருந் திருமந்திரத் தொடர் ஒரு நாமம் ஒருருவமின்றி மாற்ற மனங்கழிய நின்ற பரம்பொருளைச் செம்பொருள் எனவும் சிவம் எனவும் போற்றும் தொன்மை மரபினைச் சுட்டுவதாகும். செம்பொருளாகிய சிவ பரம்பொருளை நம் முன்னோர் திருவுருவில் எண்ணி அம்மையப்பனாக வழிபடும் நிலையில் அம்முதல்வனுக்கு அமைந்த திருப்பெயர் சிவன் என்பதாகும். செவ்வானன்ன திருமேனியினனாகத் திருவுருவமைத்து வழிபட்ட நிலையில் அமைந்த சிவன் என்னுந் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயராகும் என்பதனைச் 'செம்மேனிப் பேராளன் வானோர்பிரான்’ எனக் காரைக்காலம்மையாரும், 'சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியம்மான்’ எனத் திருநாவுக்கரசரும் அருளிய மெய்ம்மொழிகளால் இனிதுணரலாம். எனவே முழுமுதற் கடவுளுக்கு வழங்கும் சிவம், சிவன் என்னும் இருபெயர்களுள் முன்னையது சிந்தனைக்கு அரிய உருவங்கடந்த நிலையினையும், பின்னையது அடியார்க்கு எளிவந்தருளுந் திருவுருவ நிலையினையும் குறித்து வழங்குதலும் இவ்விரு நிலைப்பெயர்க்கும் அடிப்படையாயமைந்தது செம்மையென்னும் பண்பென்பதும் நன்கு தெளியப்படும். இவ்வுண்மை, செம்பொருட்டுரிைவே சிவபெருமானே’ என வருந் திருவாசகத் தொடரால் உய்த்துணரப்படும். செம்மேனிப் பேராளனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு போற்றும் வழிபாட்டு நெறியாதலின் இது சைவம் என்னும் பெயர்த்தாயிற்று.