பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


படையைச் சங்க காலத்தது அன்று என நீக்கிவிடுவோமாயின் 'பத்துப்பாட்டு என வழங்கும் தொகைப்பெயர் வழக்கிற்கு இடமில்லாது போய்விடும். மாறாக ஒன்பான் பாட்டு என வழங்கவேண்டிய நிலையேற்படும். எனவே திருமுருகாற்றுப் படை கடைச் சங்கப் புலவர் நக்கீரனாராற் பாடப்பெற்ற சங்கப் பாடலே என்பது தேற்றம்.

இனி, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை யுள் நெய்தற்கலியை இயற்றியுள்ள நல்லந்துவனாரே கலித்தொகைக் கடவுள் வாழ்த்தினையும் பாடியுள்ளார். இனி புறனானூற்றின் முதற்கண் அமைந்த 'கண்ணிகார் நறுங் கொன்றை என்னுங் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணினால்தான் அத்தொகை நூல் இறையனார் களவியலுரையாசிரியர் கூறுமாறு 'புறநானூறு' என்னும் பெயருக்குப் பொருத்தமுடையதாகும். எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து கலித்தொகை தவிர ஏனைய ஆறு தொகைகட்கும் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனாராவர். கடைச் சங்கப் புலவராகிய இப் பெருந்தேவனார் வடமொழியிலுள்ள பாரதக் கதையினை அகவல் நடையிற் பாடினமைபற்றிப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப் பெற்றார் எனத் தெரிகிறது.

வடமொழி இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் என்னும் நூல்களிற் கூறப்படும் செய்திகள் சங்க காலத்தில் தமிழ் நாட்டிற் பரவி வழங்கின என்பது சங்கச் செய்யுட்களில் அவை எடுத்தாளப் பெற்றுள்ளமையால் இனிது விளங்கும். இரண்டாஞ் சங்கமிருந்த கபாடபுரம் கடல் கோளால் அழிவுற்றபின் பாண்டியர்கள் மதுரையில் மீண்டும் சங்கத்தினை நிறுவித் தமிழ் வளர்த்தனர். வடமொழியிலுள்ள மகாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்தனர். இச்செய்திகள் 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்” எனச் சின்னமனூர்ச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இங்ங்னம் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியரது ஆட்சியில் மகாபாரதக் கதையை ஆசிரியப்பா