பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனவரும் திருவாசகச் செழுமறையால் இனிதுபுலனாம். சிவபெருமானை வழிபட்டு அம் முதல்வனது திருவருட்டுணை கொண்டு உலகுயிர்கள் இயங்குந் திறத்தினைத் தமது வாழ்வியல் நுகர்ச்சியிற் கண்டு தெளிந்த தமிழ் மக்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கை இடைக்காலத்திற் சைவசித்தாந்தம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று.

குமரிமுதல் இமயம் வரை பரவி வாழ்ந்த தொன்மைக் குடியினராகிய தமிழ்மக்களின் அக வாழ்வாகிய குடும்ப வாழ்க்கையிலும், புறவாழ்வாகிய சமுதாய வாழ்க்கையிலும் முகிழ்த்துத் தோன்றிய சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையானது வடநாட்டின் வழிவந்த வேத உபநிடதங்களுடன் தொடர்பு பெற்றுச் சிவாகமங்களின் சார்புடையதாய்ச் செழித்து வளர்ந்த காலம் திருமூலநாயனார் காலம் எனக் கொள்ளுதல் பொருந்தும். சைவசித்தாந்தம் பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (உலகு) என்னும் முப்பொருளுண்மையாகிய இம்முடிபு வடவேங்கடந் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்குப்பின் கடைச்சங்க காலத்தும் தமிழகத்தில் வாழ்ந்த நாட்டு மக்கள் வாழ்க்கையொடு தொடர்புடையதாய் நிலைபெற்று வரும் பண்டைத் தமிழர் தத்துவக் கொள்கையாகும். இவ்வுண்மை இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தையும் சங்கச் செய்யுட்களையும் உலகப் பொது மறையாக நிலவும் திருக்குறளையும் சைவசித்தாந்த சாத்திரங்களோடு ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.

பழந்தமிழர் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாட்டு நெறியில் உருவாகிய சைவசித்தாந்தம் என்னும் முத்தி நெறி பற்றிய மெய்யுணர்வுக் கொள்கையினைச் சிறப்பாகப் பத்தி நெறியாகிய தெய்வ வழிபாட்டுடன் இயைத்துப் பேணி வளர்த்த அருளாசிரியர்கள் திருமூலநாயனார் முதல் சேக்கிழார் நாயனார் வரையுள்ள திருமுறையாசிரியர்களாவர். தோத்திர வடிவிலமைந்த