பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

உலக மக்கள் அனைவரும் தத்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகும் பொதுவான ஒழுகலாறுகளுள் தெய்வ வழிபாடும் ஒன்றாகும். மக்கட் கூட்டத்தார் தாம்தாம் பிறந்து வாழும் நாடுகளின் வெப்பதட்ப அமைப்புக்கும் பிற சூழ்நிலைகட்கும் ஏற்ப வடிவாலும் நிறத்தாலும் கலை நாகரிகம் முதலியவற்றாலும் அறிவின்திறத்தாலும் படிப்படியே வளர்ச்சி பெற்று வந்துள்ளனர். உலகமுழுவதும் ஒன்று என எண்ணும் விரிந்தவுள்ளத்தினராய் உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தினர் எனக்கருதும் அளவு நாகரிகம் பரவியுள்ள இக்காலத்திலும் அறிவு முதிரா நிலையினராய் நாகரிக வளர்ச்சியின்றித் தனிமையுற்றுப் பல்வேறு குழுவினராய் வாழ்க்கை நிலைகளிற் கீழ்ப்பட்ட மக்கட் பிரிவினரும் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.

நாகரிகம் பெற்றார் பெறாதார் ஆகிய எல்லா மக்களிடையேயும் தம்மைப் பாதுகாத்து அருள்புரியும் தெய்வம் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கை நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றது. ஆகவே தெய்வங்கொள்கை யென்பது நாடு மொழி இனம் என்னும் வேறுபாடின்றி மக்கட்குலத்தார் அனைவர்க்கும் இயல்பாகத் தோன்றுவதோர் உணர்வு எனக்கொள்ள வேண்டியுளது. காணப்படும் இவ்வுலகில் எண்ணிறந்த அனைத்து உயிர்களும் தத் தமக்கேற்ற உடம்புடன் நிலைபெற்று வாழ்தற்கு இன்றியமையாதது உணவாகும். மன்னுயிர்கள் உடம்பொடு கூடி வாழ்தற்கு இன்றியமையாத உணவினும் சிறந்ததாக மக்கட்குலத்தாராற் கருதத்தகுவது தெய்வங் கொள்கையேயாகும். இந்நுட்பத்தினைத் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமது வாழ்க்கை யனுபவத்தால்