பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

7


பரவுவதாயிற்று. உலக மக்கள் காலந்தோறும் வளர்ச்சி பெற்று வரும் தம்முடைய வாழ்க்கை வளங்களுக்கேற்பத் தெய்வ வழிபாட்டிலும் அவ்வழிபாட்டினை அடியொற்றியுருவாகிய தத்துவவுனர்விலும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளார்கள். இவ்வாறு உலகெங்கும் பரவி வாழ்ந்த மக்கட்குலத்தாரது உணர்வுநிலை கட்கேற்ப அவர்களால் வழிபடப்பெறும் தெய்வங்களின் திருவுருவங்களும் அடையாளங்களும் வழிபாட்டுக்குரிய நிலையங்களாகிய திருக்கோயில்களும் பலவாக விரிவடைந்துள்ளன.

இங்ங்னம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களது வாழ்க்கையில் நிலவிவரும் தெய்வ வழிபாடுகள் சமய நெறியாகவும் அந்நெறிபற்றிய சிந்தனைகள் தத்துவங்களாகவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இந்நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் முதலிய அயலவர் கலப்பினால் தமிழ்ச் சமயநெறிகளில் அயலவர் நடைமுறைகள் சில இடம்பெற்றன எனக்கருத இடமுண்டு. இந்திய நிலப்பரப்பில் வழங்கும் திராவிட மொழிகளின் தொன்மையையும் அமைப்பையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் தமிழ்மொழி முதன்மை பெற்று விளங்குகின்றது; அதுபோலவே இந்திய நாட்டில் வாழும் பழங்குடி மக்களாகிய திராவிட இனத்தவரின் தொன்மைச் சமய அமைப்புகளையும் அவற்றின் தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் சைவசமயம் முதன்மை பெற்று விளங்குகின்றது.

சிந்துவெளியில் நிகழ்ந்துள்ள அகழ்வாராய்ச்சியினால் அறியப்படும் இந்திய நாகரிகம் என்பது இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையதாகும். அஃது இந்நாட்டில் ஆரியர் வருவதற்கு முன் நிலவிய திராவிடநாகரிகமே என்பது நடுநிலையுணர்வுடைய வரலாற்றாசிரியர்களால் உறுதி செய்யப்பெற்றுளது. இந்திய நாட்டின் வடபகுதியில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியாற் புலனாகும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னாட்டிற் சங்க இலக்கியங்களால் அறியப்படும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை இணைக்கும் முறையில்