பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



8

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அமைந்தது, இவ்விரு நாகரிகங்களாலும் சிறப்பாகப் புலப்படுத்தப்படும் சைவசமய நெறியேயாகும். இதனால் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் சிந்துவெளி மக்களிடையே நிலவிய சிவ வழிபாடு தென்னாட்டில் வாழும் தமிழ் மக்களின் தொன்மை வரலாற்றொடு மிக நெருங்கிய தொடர்புடையதென்பது நன்கு துணியப்படும்.

சிந்துவெளியிற் பலவகையான வழிபாட்டு நெறிகள் காணப்படினும் அவற்றுட் சிறந்து விளங்குவது சிவ வழிபாடேயாகும். "மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருள்களால் நமக்குப் புலனாகும் செய்திகள் பலவற்றுள் முதன்மை வாய்ந்ததும் நிகரற்றதும் ஆகத் திகழ்வது சைவ சமயத்தின் வரலாறெனின் அது மிகையாகாது. செம்புக் காலத்திற்கும் கற்காலத்திற்கும் முற்பட்ட தொல் பழங்காலத்தில் சைவசமயத்தின் வரலாறு தொடங்குவதும், உலகப் பழம்பெருஞ்சமயங்களுள் மிகப் பழைய சமயமாகச் சைவசமயம் வீறுடன் நின்று நிலவுவதும் குறிப்பிடத் தக்கனவாகும்” என்பர் சர் ஜான்மார்ஷல் துரைமகனார்.

சைவசமய வரலாற்றைக் காலமுறைப்படிக் கருதி நோக்குங்கால் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் சிறந்து விளங்கிய மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் சமய வழிபாடு இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். இக்காலத்தில் தமிழகத்தில் நிலவிவரும் இலிங்க வழிபாடு, சக்தி வழிபாடு, பசுபதி வழிபாடு முதலியன இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையதாகிய சிந்துவெளி நாகரிகத்திற் சிறப்புடைய சமய நெறிகளாகத் திகழ்ந்தன என்பது சர் ஜான்மார்ஷல், ஹீராஸ் பாதிரியார் முதலிய ஆராய்ச்சியாளர்களின் துணியாகும். சிந்து வெளியிலே அகழ்ந்தெடுக்கப் பட்ட ஒவியங்கள், முத்திரைகள், களிமண் படிவங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சர் ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறியுள்ளார்.

"யோகிகட்கல்லாம் தலையாய யோகி சிவன்.