பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமாலிருஞ்சோலையிற் கோயில் கொண்டருளிய காத்தற் கடவுளாகிய திருமால், திருப்பரங்குன்றத்திற் கோயில் கொண்டருளிய குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் ஆகிய தெய்வங்களின் அருள் நலங்களை இசையுடன் பரவிப் போற்றும் பண்சுமந்த பாடல்களின் தொகுதியாக அமைந்தது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். இயற்கை வனப்பும், இயற்கைப் பொருள்களின் வாயிலாகத் தோன்றும் தெய்வ வனப்பும் ஆகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருள்வகை என்பர் சான்றோர். இவ்விருவகை வனப்புக்களையும் தன்னகத்தே கொண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் வகையில் சங்ககாலத் தமிழ் மக்கள் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாட்டு முறைகளை விரித்துரைப்பது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். கடைச் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய தேவாரம், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயலாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலிய பத்திமைப் பனுவல்களுக்கு அடிப்படையாக விளங்குவது இப்பரிபாடல் தொகுதியே யாகும். திருமால், செவ்வேள் ஆகிய தெய்வங்களை இசையுடன் பரவிப் போற்றும் பரிபாடலாகிய இத்தொகை நூல், திருமாலடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையினையும், சிவனடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையினையும் சங்க காலத்தில் தமிழகத்தில் பரவி இருந்த வைதிக நெறியையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதன் கண் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடும், தத்துவ விளக்கமும் நுணுகி ஆராயத் தக்கனவாகும்.

திருமால் வழிபாடு :- திருவாவினன்குடியில் முருகப் பெருமானைக் காணவந்த தெய்வங்களைப் பற்றிக் கூறுமிடத்து,

§§

கடுவொ டொடுங்கியதும்புடை வாலெயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு சுடுந்திறற் பாம்புபடப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளனி நீள்கொடிச் செல்வனும்” (திருமுருகு 148-151)