பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

9


அதனாலேயே அவருக்கு மகாதவசி, மகாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன. . . . . . . . . . சைவத்தைப் போலவே யோகநெறியும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகிமட்டும் அல்லர்; விலங்குகட்கெல்லாம் தலைவர் (பசுபதி); சிவனுக்குரிய இவ்வியல்பினையே சிவனைச் சுற்றி யானை புலி காண்டாமிருகம், எருது என்னும் நான்கு விலங்குகள் நிற்கும் தோற்றம் காட்டுகின்றது. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள் பிற்காலத்திற் சிவனது சிறப்புத் திருவுருவம் ஒன்றைக் குறிக்கும் நிலையில் மூவிலைச் சூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பிற்காலத்திலே சிவனுக்கு அமைந்த பல அமைப்புக்களின் தோற்றநிலைகளே சிந்து வெளி முத்திரைகளிற் காணப்படுகின்றன என நாம் கருதலாம்”.

அரப்பாவின் நாகரிகம் கி. மு. நாலாயிரத்திற்கும் மூவாயிரத்திற்கும் இடைப்பட்டது என்பர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். கி. மு. 2500-க்கும் கி. மு. 1500-க்கும் இடைப்பட்டது சிந்துவெளி நாகரிகம் எனவும் அஃது ஆரியர்களால் அழிக்கப்பட்டது எனவும் ஆரியர் இந்தியாவிற் குடியேறிய காலம் கி. மு. 1500 எனவும் சர் மார்ட்டிமர் வீலர்கூறுவர். சிந்துவெளி நாகரிகத்தின் மொகஞ்சதரோவின் கூறுகள் அந்நாகரிகத்தின் தொடக்க காலத்ததன்று; மொகஞ்சதாரோ காலத்தைக் காட்டிலும், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது முற்பட்டிருத்தல் வேண்டும் என்பர் பேராசிரியர் இராதாகுமுதமுகர்ஜி.

சிந்துவெளி மக்கள் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்திய திருவுருவம் சிவலிங்கங்களே. அரப்பாவில் மட்டும் சிறியனவும் பெரியனவுமாக ஏறக்குறைய ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. சிறிய சிவலிங்கங்களை அக்கால மக்கள் இக்காலத்து வீர சைவர்களைப்போன்று தங்கள் கழுத்திலும் கையிலும் கட்டிக்கொண்டிருத்தல் கூடும். இதனால் சைவ சமயத்திற்கேயுரிய சிவலிங்க வழிபாடு ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியிற் சிறந்து விளங்கியதெனபது நன்கு துணியப்படுதல் காணலாம்.