பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

183


சிறந்தன. அச்சிலவற்றிலும் கல்லென ஒலிக்கும் கடலும், கடற்கரைப் பரப்பும் போல வேறு வேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையும் உடைய மாயோனையும் அவன் தமையனாகிய பலதேவனையும் தாங்கும் உயர்ந்த திருமாலிருங்குன்றம் சிறப்புடையதாகும். மனம் வீசும் கொத்துக்களையுடைய துழாய் மாலையை அணிந்த திருமால் தன்னருளால் வெளிப்பட்டுக் கொடுத்தாலல்லது அரிதிற் பெறு துறக்கத்தை எளிதிற் பெறுதற்குரிய நிலையில் விளங்கும் மாலிருங்குன்றத்தை எல்லோரும் கேட்க ஏத்தக் கடவோம்! என இளம்பெரு வழுதியார் தாம் பாடிய பதினைந்தாம் பரிபாடலில் திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை முதற்கண் குறித்துப் போற்றியுள்ளார். அசையும் அருவி மிகவும் ஆரவாரித்து விழுதலால் சிலம்டாறு அழகு செய்யும் திரு என்னும் சொல்லோடும் சோலை எனும் சொல்லோடும் மாலிருங்குன்றமெனும் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலை மலை என்னும் இத்திருப்பெயரினது பெருந்தன்மை பூமியின்கண் நன்றாகப் பரவுக.

நிலைபெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனடுவே இருள் வளர்தலை யொக்கப் பொன்னாடையை யுடைய திருமால் தம்முன்னோனாகிய பலதேவனோடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை மாந்தர்களே நினைந்து போற்றுமின் அவுனரை நேரே பொருது கொன்றானது நிறத்தையுடைய குன்றத்தினை நும் மனைவியரோடும் இருமுதுகுரவரோடும், குழவிகளோடும் சுற்றத்தோடும்கூடத் தெய்வமாக மதித்துத் திசைநோக்கித் தொழுது சென்மின். தன் உந்தித் தாமரையினை யொக்கும் கண்களையுடையனாய் நீரைக் கொண்ட மழை மேகமும் இருளும் நீலமணியும் போலும் மேனியனாய் எல்லா வுலகிலும் வெளிப்பட்டுள்ள அவ்விடத்து உயிர்த்தொகுதிகளின் பிறவித் துன்பத்தினைக் களைவோன் ஆகிய திருமால் அன்புடையனாய் இருங் குன்றத்தின் கண் எழுந்தருளியுள்ளான். ஆதலால் அம் முதல்வனைக் கூர்மையணிந்த வளைந்த நாஞ்சிற் படையினை யுடையவனே! கோபம் மிக்க தண்டினை ஏந்தியவனே! வலம்புரிச் சங்குடன் சக்கரப் படையினை உடையவனே!