பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

13


இந்நுட்பம்,

“சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே.”

எனவரும் திருவாசகத் தொடரால் இனிது புலனாம். எத்தகையோரும் காணவொண்ணாத அருவநிலையிலுள்ள இறைவனை அன்புடையார் எல்லாரும் புறத்தே அடையாளவுருவில் அருட்குறியாகக் கொண்டு வழிபாடு செய்தற்கு ஏற்றவண்ணம் அருவமும் உருவமுமாகிய இருதிறமும் விரவிய நிலையில் அமைந்த அருவுருவத் திருமேனியாக உலகமக்கள் எல்லோராலும் போற்றி வழிபடப் பெறுவதாயிற்று. இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனை அகத்திலும் புறத்திலும் வழிபட்டு உய்திபெறுதற்குரிய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம், காணவொண்ணாத அருவினுக்கும் காணப்படும் உருவினுக்கும் காரணமாகத் திகழ்வது காத்தற் றொழிலினனாகிய திருமாலும் படைத் தற்றொழிலினனாகிய நான்முகனும் தம்முள் மாறுகொண்டு இகலிய நிலையில் மனத்திற்கும் மாற்றத்திற்கும் முதல்வராகிய அவ்விருவரும் முறையே அடியும் முடியுந்தேடிக்கான வொண்ணாதவாறு நீண்ட தழற்பிழம்பாய்த் தோன்றியதும் அவ்விருவரும் தம் முனைப்படங்கி நாணி அன்புடையராய் வழிபட்டபோது அத்தழல் நடுவே இங்குற்றேன்’ என்று இலிங்க வடிவில் தோன்றியதும் ஆகிய பழஞ்செய்திகள் இலிங்கபுராணத்தே கூறப்பட்டன.

“செங்கணானும் பிரமனுந்தம்முளே

எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்

'இங்குற்றேன்' என்றிலிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடைப்புண்ணிய மூர்த்தியே”

எனவரும் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை, அட்ட மூர்த்தியாகிய இறைவனை அழல்நிற வண்ணனாகக் கொண்டு போற்றும் சிவலிங்கத் திருவுருவ அமைப்பினை இனிது

7. மாணிக்கவாசகர், திருவாசகம், 396,

8. திருநாவுக்கரசர், தேவாரம், 5. 95.11.