பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சொரியும் நிலையில் உயர்ந்து தோன்றும் மலைகள் இரண்டிற்கும், திருமகளின் இருமருங்கு நின்றும் பூநீர் மேற் சொரியும் இரண்டு யானைகளும் உவமையாகக் கூறப் பட்டன. இங்ங்னம் இருமலைகளினிடையே யமைந்த மாணிக்கப் பாறையின் நடுவே பொற்பூக்களுடன் தோன்றும் வேங்கை மரத்திற்கு இரு வேழங்கள் பூநீர் மேற் சொரியச் செந்தாமரை மலரில் எழுந்தருளிய வேழத்திருமகளை (கஜலட்சுமியை) உவமையாகக் கபிலர் எடுத்துக் கூறுதலால் வேழத்திருமகள் திருமேனி சங்க காலத்திற் பலராலும் வழிபடப் பெற்ற தொன்மையுடையதென்பது நன்கு துணியப்படும். செந்தாமரை மலர் தன் கண் திருமகள் வீற்றிருத்தல் பற்றித் தெய்வத்தாமரை எனச் சிறப்பிக்கப் படுவதாயிற்று. திருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருத்தலால் அத்தெய்வத்திற்கு மலர் மகள் என்பதும் பெயராயிற்று. தாமரையினாள் எனப் போற்றுவர் திருவள்ளுவர். திருமகளுக்குச் செந்நிறத்திருமேனி உடைமை பற்றிச் செய்யோள் எனவும் அழைத்தலுண்டு.

"செய்யோள் சேர்ந்த நின்மாசிலகலம்” என்பது பரிபாடல். பொருளுடமைக்குத் தெய்வமாக விளங்குபவள் திருமகள். எனவே திருமகளது அருள் நோக்கு மக்களுக்குத் திருவுடைமையாகக் கருதப் பெற்றது.

நான்முகன்

எல்லாம்வல்ல இறைவன் துணையால் உலகைப்

படைக்கும் தொழிலுடையவன் நான்முகன் ஆவான். உலகில் உயிர்கள் உடம்பொடு படைக்கப் படுவதற்கு முன்னே திருமாலுடைய உந்தித் தாமரையில் முதற்கண் தோன்றியவன் நான்முகன். இச்செய்தி,

"நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்

தாமரைப்பொகுட்டின்” (பெரும்பாண். 402-404)

என்வரும் தொடரால் புலனாகும். உலகப் படைப்பிற்கு முன் தோன்றியவன் நான்முகன் ஆதலின், அத்தெய்வத்தைத்