பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அறியாதவளாகிச் செயலற்ற வுள்ளத்தினளாய் வினவுதலாலே முதுமை வாய்ந்த கட்டுவிச்சியராகிய பெண்டிர் பிரப்பரிசி யைப் பரப்பிவைத்துக் கட்டுப்பார்த்து இது முருகனது செயலால் வந்த வருத்தம் என்று கூறுதலால், அதனை உண்மையாகக் கருதி என் மகள் வாட்டம் தவிர்ந்து முன்போல் பொலிவு பெறுவாளாக என்று தெய்வத்தைப் பரவி மனையிலே இனிய வாத்தியங்கள் ஒலிக்க வெறியாடு களத்தே இயற்றி, அதைச் செய்த பந்தலிலே வெள்ளிய பனந்தோட்டினைக் கடப்பமலரோடு சூடி இனிய தாளத்தோடு முருகக் கடவுளின் பெரும்புகழினைக் குறித்து வேலன் வெறியாடுதலை விரும்பினால் என்ன ஆகுமோ! அங்ங்னம் வேலன் வெறியாடிய பின்னும் எனது வாடிய மேனி வாட்டம் தீர்ந்து முன்புபோற் பொலிவு பெறாதாயின் இக்களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படா திருத்தல் அரிது. அஃதன்றியும் என்பொருட்டு அறிவுடைய பெரியோர்கள் தாம் கொண்ட துன்பத்தைக் கண்டு உளமிறங்கி மனம் கமழ் வெற்பனாகிய முருகன் ஒருகால் எனது வாட்டத்தை நீக்கி முன்னைய அழகினைத் தந்தருள்வான் ஆயின், வளையலை அணிந்த நம் தலைவி உற்ற துன்பமும் என்னான் அன்றிப் பிறிதொன்றான் எய்தியது என நம் தலைவர் கேட்டறியின், யான் உயிர்தாங்கி வாழ்தல் அவ்வலர் வெளிப்பாட்டினும் இன்னாதாகும்” என்பது இவ்வகப்பாடலின் கருத்தாகும். இதன்கண் தெய்வத்தை நினைந்து குறிசொல்லும் கட்டுவிச்சியராகிய மகளிர் தமது குறியாற் புலப்படும் உண்மையினை வெளிப்படக் கூறாது சிலசமயம் மறைத் துப் பொய் கூறும் நிலையும் உண்டென்பது,

“முதுவாய்

பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பு இரீஇ முருகன் ஆரணங்கென்றலின்”

எனவரும் தொடரால் புலனாகும். தலைவியின் மெலிவிற்குத் தலைமகனை அடையப் பெறாமை காரணமாகவும், அவ்வுண்மையை மறைத்து முருகனது அணங்கே தலைவியின் மெலிவிற்குக் காரணம் என்றலின் 'பொய்வல்