பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவும்,

"அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி

வெறியென வுணர்ந்த வுள்ளமொடு மறியறுத்து அன்னை அயரும் முருகுநின் பொன்னேர் சுணங்கிற் குதவாமாறே” (நற். 47)

எனவும் வரும் தொடர்களால் அறியப்படும்.

முருகன் வழிபாட்டில் உறைத்துநின்று அப்பெருமானருளால் உறுவது கூறும் வேலன் சில சமயங்களில் முருகன் அருளைச் சிந்திக்காமலும், தன் அறியாமையாலும் தலைமகளுக்குத் தலைமகனால் நேர்ந்த மெலிவினை முருகனால் வந்ததெனப் பிறழவுணர்ந்து வெறியாடலில் தலைப்படுதல் உண்டு.

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி

அறியா வேலன் வெறியெனக் கூறும்” (ஐங். 243)

எனவும்,

"மறிகொலைப்படுத்தல்வேண்டி வெறிபுரி

ஏதில் வேலன்” (அகம். 292)

எனவும் வரும் தொடர்களால் அறியப்படும்.

முருகனைப் பூசித்து அவன் அருள்வழி நின்று தான் கூறும் வாய்மொழியால் ஊர்மக்களுக்கு நலம் புரிதலையே தனது வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு வாழும் வேலன் கூறும் மொழிகள் மெய்ம்மை உடையனவே என ஊர்மக்கள் நம்பினர் என்பது,

“பொய்யாமரபின் ஊர் முதுவேலன்

கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந் தூக்கி முருகென மொழியுமாயின்” \ஐங். 245)

என்பதனால் புலனாகும்.