பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற சுடர்விடும் நெடிய வேலாலே, அவுனரது நல்ல வன்மையெல்லாம் அழியும்படி கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியினையும், ஒருவராலும் அளந்தறிய வொண்ணாத பொருள் சேர் புகழினையும் உடையவன். சிவந்த வேற்படையைத் தாங்கிய சேயோ னாகிய முருகப் பெருமானுடைய திருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்வினைகளைப் பல பிறப்புக்களினும் விரும்பிப் புரிந்த தலைமைபெற்ற உள்ளத்துடனே அப் பெருமான்பாற் செல்லுதற்கு நீ விரும்பி விட்டாயாயின் நினது நல்ல நெஞ்சத்தினது இனிய விருப்பம் ஈடேற நீ கருதிய வீடு பேற்றின்பத்தை இப்பொழுதே தப்பாமற் பெறுவாய். வெற்றியாலும் செல்வத்தாலும் விளக்கமுற்ற கடல் நகரத்துக்கு மேற்றிசையிலுள்ளதும். இரவெல்லாம் தாமரை மலரில் உறங்கிய வண்டினங்கள் விடியற்காலத்தே நெய்தற் பூவையூதி ஞாயிறு தோன்றின காலத்தே கண்னைப் போன்று மலர்ந்த சுனைப் பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் வளமார்ந்ததுமாகிய திருப்பரங்குன்றத்திலே இறைவனாகிய முருகன் மனம் விரும்பி எழுந்தருளியிருத்தலு முரியன். அதுவன்றி, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக் கரங்களும் தத்தமக்கேற்ற தொழில் செய்ய யானையின்மேல் எழுந்தருளி வான்வழியாகத் திருச்சீரலைவாய் என்ற திருப்பதியை யடைதலும் அவனுக்கு நிலைபெற்ற பண்பாகும். அதுவன்றிப் படைத்தற் கடவுளாகிய நான்முகனுக்கேற்பட்ட சாபத்தை நீக்குதற்பொருட்டுத் திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தெய்வங்களும், முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதினெண்கணங்களும் துனியில் காட்சி முனிவர் முற்புகக் கந்தருவர் யாழிசைக்க உடன் வந்து காணத் திருவாவினன்குடியில் தன் தேவியுடன் சிலநாள் அமர்ந்திருத்தலும் உரியன்.

அதுவன்றி இருபிறப்பாளராகிய அந்தணர்கள் நீராடி ஈர ஆடை உடுத்து ஆறெழுத்து மந்திரமாகிய மறையை ஒதி மலர் தூவி வணங்க அவ்வழிபாட்டை விரும்பி ஏற்று ஏரகம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருத்தலும் உரியன். அதுவன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்திற்கு முதற்கை