பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விழவறா வியலாவணத்து மையறு சிறப்பிற் றெய்வம் சேர்த்திய மலரணி வாயில் பலர் தொழு கொடியும்”

எனவரும் பட்டினப்பாலை விரித்துரைக்கின்றது. இதனால் முருகனுக்குரிய திருவிழாவில் நிகழும் கொடியேற்று விழாச் சடங்கில் வெறியாடு மகளிரொடு இளமகளிரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தல் என்பது உய்த்துணரப் படும். முருகப் பெருமானை மணந்த வள்ளி நாச்சியாரது தெய்வத்தோற்றம் மக்கள் கண்ணால் உற்று நோக்குதற் கியலாத பேரொளி வாய்ந்தது என்பது,

“முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோன்று

உருவு கண்ணெரிப்பநோக்கலாற்றலனே' (நற். 82)

எனவரும் நற்றிணைத் தொடரால் அறியலாம். களவொழுக்கத்துத் தலைவனது பிரிவினால் ஆற்றாளாகிய தலைமகளது மெலிவுகண்டு, இஃது தெய்வத்தானாகியது எனச் செவிலி வெறியாட்டு நிகழ்த்தக் கருதிய நிலையில் தோழி தலைவன் சிறைப்புறத் தானாகத் தலைவியை நோக்கிக் கூறியதாகவமைந்தது நற்றிணை 173ஆம் பாடலாகும். சுனையிடத்தே பூக்களைக் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலே படர்ந்த செங்காந்தட்பூவினை முடிமாலையாகக் கட்டியும் தன்வழிபாட்டில் ஈடுபட்ட நம்பால் முருகப்பெருமான் அருள்கூர்ந்து தலைவியின் வேறுபாடு வெறியாடுதலால் நீங்கும் எனக் கருதி முயலும் அன்னைக்குத் தன் தெய்வத் தோற்றத்தினைக் கண்ணினால் காணும்படி நனவிலோ அன்றிக் கனவிலோ புலப்படுத்தி நின்மகளாகிய இவள் உற்ற நோய் என்னால் ஏற்பட்டது மன்றிப் பிற தெய்வங்களாலும் ஏற்பட்டதுமன்றி அழகிய மலைக்குரியனாகிய தலைவன் ஒருவனால் ஏற்பட்டதே என்று தன் அருளால் வெளிப்படக் கூறில் நெடுவேளாகிய அம்முதல்வனுக்கு வருவதொரு குற்ற முண்டோ? எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறும் முறையில் சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் களவொழுக்கந்தவிர அறிவுறுத்தும் நிலையில் இப்பாடற் பொருள் அமைந்துள்ளமை காணலாம்.