பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

313


சிறு தொழிலுமுடைய மக்கள் மாட்டுப் பணிந்துகூறும் பொய்ப்புகழை ஒழிந்து நினது பொருள் சேர்ந்த புகழையே வாழ்த்தி நின்னுடைய அழகிய நீண்ட திருப்பரங் குன்றத்தினை யாமும் எம் சுற்றமும் பாடித் தொழுதேமாய் பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நாளைப் பெறுக என்று வேண்டிக் கொள்கின்றேம் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பொய்ம்மையாளரைப் புகழாதே. எம் பெருமானாகிய நின் மெய்ப்புகழையே ஏத்திப் பாடித் தொழுகின்றோம் என்பார்,

“பணியொரீஇ நின்புகழேத்தி

அணிநெடுங்குன்றம் பாடுதும் தொழுதும்”

என்றார். "நாமார்க்கும் குடியல்லோம் எனவரும் அப்பர் அருள் மொழியும், 'பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்’ எனவரும் நம்பி ஆரூரர் அருள் மொழியும் இங்கு நினைக்கத்தக்கன. இங்கு 'ஏமவைகல்’ என்றது பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நன்னாளை.

“சேவலங்கொடியோன் காட்ப

ஏமவைகல் எய்தின்றாலுலகே’

எனவரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்தது, குன்றம் பூதனார் பாடிய 18ஆம் பரிபாடலாகும். நிலத்தால் தாங்கப்படும் கடற்பரப்பினுள் பரந்து சுற்றிய சூர்மாவை அழித்த வேற்படையையுடைய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றம், முருகனைப் பயந்த இமயமலையொடு மேல்நின்றருளும் பெருமை யுடையது. வேற்படையைத் தாங்கிய செவ்வேளே! விரைந்த மயிலின்மேல் அமர்ந்துவரும் ஞாயிறு போல்பவனே மழை முழங்கிய சிகரமும் அதன் மேல் கொடி போன்று தோன்றும் மின்னலும் நினது முகபடாம் அணிந்த பினிமுகம் என்னும் யானையை ஒக்கும். நின் குன்றத்தின் கண் பல்வேறு