பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

317


பயனை நுகர்தல் வேண்டி வானுலகத்துக்குச் செல்வாரைப் போலத் தமக்கேற்ற மாண்பமைந்த அணிகலன்களையும் நல்ல துகில்களையும் அணிந்துகொண்டு விரும்பிய குதிரையின்கண் அமர்ந்தும் நன்கு ஓடுதலமைந்த தேரின்மீது அமர்ந்தும் ஒளி விளக்கம் தெருவின்கண் இருளை நீக்கப் போந்து நினக்குரிய திருப்பரங்குன்றத்திற்கும் கூடல் நகரத்திற்கும் இடையேயுள்ள வழியெல்லாம் நெருங்கி நின்திருவிழாக் காண யாத்திரை செல்கின்ற குளிர்ந்த மணலார்ந்த பெருவழி, அங்ங்ணம் செல்வோருடைய மாலை யணிந்த தலைகள் இடைவெளியின்றி நிறைந்து காணப் படுதலால், ஒத்த பூக்களை நிறையவைத்துக் கட்டிப் பெரிய நிலவுலகிற்கு அணிந்த மாலையினைப் போன்று அமைந்துளது என்பதனை இப்பாடலில் எட்டு முதல் 18 முடியவுள்ள அடிகள் புலப்படுத்துகின்றன. அறிவினால் மாட்சிமையுடைய பாண்டியன் இளைய மயில்போலும் சாயலையுடைய மகளிரோடும் அரசியற் கடமையினை நன்குணர்ந்த தன் கண்னெனத்தகும் அமைச்சர்களோடும் கூடி நாட்டு மக்களும், கூடல்நகர மாந்தரும் பழைய வரிசையாற் கூடித் தோட்புறத்தேயசையும் பரிவட்டத் துடனும், முருகன் புகழ் பாடிய நாவுடனும், பரந்த உவகையோடும் தன்னைச் சூழவந்து திருப்பரங்குன்றத்தின் மேலேறி முருகப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயிலைப் பெருமையுண்டாக வலம் வந்து போற்றும் பண்பினாற் சூழ்ந்து வருதலை உவமை கூறுங்கால் நிறைமதியுடனே ஒளியுடைய விண்மீன்கள் மேருமலையின் பக்கத்தே சூழ்வருதலையொத்துத் தோன்றும்.

மத நீரில் மொய்த்தற்கென வண்டுகள் தொடரும் கன்னத்தையுடைய யானைகளை வழியினின்றும் வாங்கிக் காலிற் சங்கிலியாற் பிணித்து மரங்களிற் கட்டுவோரும் அவற்றிற்கு முறித்த கரும்புத் துண்டங்களை உணவாகக் கொடுப்போரும் குதிரைகளை வழியினின்றும் வாங்கி ஒரத்தில் நிறுத்துவோரும் தேர்களை வழியினின்றும் ஒதுக்கி நிறுத்துவோரும் ஆக யானை குதிரை தேர்கள் பரவியுள்ள திருப்பரங்குன்றத்தின் கீழுள்ள இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையினையுடையதாகும்.