பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

323


குன்றத்தினைப் பிளந்த வேற்படையாகும். நின்னாற் பூணப்பட்டது, சுருளுதலையுடைய வள்ளிப் பூவினை இடையிட்டுத் தொடுத்த கடப்பம் பூவினையுடைய தாய் ஒன்றுபட்டு மலர்ந்த மாலை. நீ அமர்ந்தருளியது, உயர்ந்தோர் நாவினாற் புகழப்பெறும் நலத்தால் நிறைந்து ஏழு நிரையாக அடுக்கிய ஏழிலைப்பாலை மரத்தினை யுடையதாய்ப் பக்க மலையாகிய இலகடத்தினையும் அருவியாகிய முகபடாத்தினையும் உடையதாய்த் தரையின் கணின்று விசும்பளவும் ஓங்கிய பரங்குன்றமாகும். இத்தகைய குன்றத்து அடியின்கண் உறைதலாகிய பேறு மறுபிறப்பினும் எமக்கு இயைவதாகுக என வேண்டி நின்னைத் தொழு கின்றோம் என முருகவேளைப் போற்றித் தொடங்கிய இப்பாடல் காதல் மகளிரும் மைந்தரும் மகிழ்ந்து விளையாடும் பரங்குன்றின் சிறப்பினை விரித்துரைத்து மாற்றாரை அமரின்கண் கொன்ற வேற்படை முதலிய படைக்கலங்களை யேந்திய பன்னிருகைகளையும் ஆறு திருமுகங்களையும் உடைய செல்வனே அறத்தையே விரும்பிய சுற்றத்தோடு கூடிநின் அடிக்கண் உறைதல் இன்றுபோல் என்றும் எமக்கு இயைக என்று பரவுகின்றோம்” என முருகனை முன்னிலைப் படுத்தி வேண்டும் முறையில் நிறைவுபெறுகின்றது. இயலிசைப்பனுவலாகிய பரிபாடலால் திருமாலும் செவ்வேளும் ஆகிய தெய்வத்தைப் பரவிப் போற்றும் புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் தாம் வாழ வேண்டும் என்னும் தனி முறையிற் கடவுளை வாழ்த்தித் தத்தமக்குரிய வற்றை வேண்டிப் பெறும் தன்னலவுணர்வின்றி அன்புடைய சுற்றத்தார் அனைவரொடும் கூடி நின்று உலகம் வாழ இறைவனை இன்னிசையாற் போற்றிப் பரவும் உயர்ந்த குறிக்கோளுடையராய்த் திகழ்கின்றனர். கடைச் சங்க காலத்தில் கடவுள் வழிபாட்டிற் பாடப்பெற்ற பண் சுமந்த பாடல்களாகிய இப் பரிபாடல்களின் பொருளமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால், இயற்கை வனப்பும் தெய்வ வனப்பு மாகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருளாம் என்பதும் கடைச் சங்ககாலத்து மலையும் காடும் காவும் ஆற்றிடைக் குறையும் ஊர் மன்றங்களும் ஆகிய ப்ல்வேறிடங்களிலும் வேறுவேறு பெயருடன் வேறு வேறு