பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி'

(திருமுருகு. 253-259)

என முருகப்பெருமானை ஆலமர் செல்வனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல்வனுடைய சத்திகளாகிய உமாதேவி கொற்றவை - காடுகிழாள் (காளி) என்போர்க்கும் மகனாகவும் நக்கீரனார் பரவிப் போற்றியுள்ளமையால் நன்கு புலனாகும். ஆகவே பண்டைநாளில் தனித்தனியே வேறுவேறு திருவுருவமைத்து வழிபாடு செய்யப்பெற்ற சிவசத்திகளும் சத்தியின் மைந்தனாகவும் குறிஞ்சி நிலத்தெய்வமாகவும் வழிபடப் பெற்ற முருகவேளும் செம்பொருளாகிய சிவத்துடன் நெருங்கிய தொடர்புடைய தெய்வங்களாக மக்கள் மேற்கொண்ட தெய்வ வழிபாடுகளில் இணைக்கப்பட்டுச் சிவபரம்பொருளே முழுமுதற்கடவுள் எனக் கருதிப்போற்றும் ஒரு தெய்வ வழிபாட்டுமுறை தமிழகத்திற் சங்கககாலத்திற்குப் பன்னூ றாண்டுகட்கு முன்னரே உருவாகி நிலைபெற்று விட்டதென்பது மேற்குறித்த திருமுருகாற்றுப்படைத் தொடர்களாலும் ஏனைய சங்கச் செய்யுட்களிற் சத்தியைப் பற்றியும் முருகப் பெருமானைப் பற்றியும் ஆங்காங்கே காணப்படும் பல்வேறு குறிப்புக்களாலும் நன்கு விளங்கும்.

மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத் தெய்வங்கட்கும், முல்லை. நிலத் தெய்வமாகிய மாயோனது அருட்பிறப்பாகிய கண்னன், பலதேவன் ஆகிய தெய்வங்கட்கும் மாயோனுடன் தொடர்புடைய திருமகள், நான்முகன், காமன் முதலிய தெய்வங்கட்கும், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரள் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்னும் நால்வகைப் பிரிவினராகிய முப்பத்து முக்கோடி தேவர்கட்கும் பதினெண்கணங்கட்கும் தலைமையுடைய முழுமுதற் கடவுளாகச் சிவபெருமான் சங்கச்செய்யுட்களிற் குறிக்கப்பெற்றுள்ளார்.

பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான்