பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என அமண்சமயச் சான்றோர்களையும் அவர்களது விரதக் கோலத்தினையும் விரித்துக்கூறிய ஆசிரியர் "இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கை” என்பதனால் பெளத்தப் பள்ளியையும் குறிப்பாகச் சுட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுளது.

இனி, மதுரைக் காஞ்சியில் கடவுட்பள்ளி என்பதற்கு நச்சினார்க்கினியர் பெளத்தப் பள்ளி’ என உரை வரைதற்குரிய காரணம் யாது என்பதும் இங்குச் சிந்தித்தற் குரியதாகும். தொல்காப்பியம், சங்கவிலக்கியம்,திருக்குறள் முதலிய பழந்தமிழ்த் தொன்னூல்களில் 'பள்ளி என்ற சொல் 'இடம் என்ற பொதுப்பொருளிலும் துயிலுமிடம், படுக்கை, சிற்றுர், அறவோர் இருப்பிடம், கல்விபயிலும் இடம் என்ற சிறப்புப் பொருள்களிலும் பயின்று வழங்கக் காண்கின்றோம். 'அறவோர் பள்ளி (சிலப். இந்திர. 179) எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அருகர்பள்ளி, புத்தர்பள்ளி' என அடியார்க்கு நல்லார் உரைவரைந்துள்ளார். 'அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி (சிலப். ஊர்காண்.11) எனவரும் சிலப்பதிகாரத்தொடர் அருகர்பள்ளி, புத்தர்பள்ளி என்னும் புறச் சமயத்தார்க்குரிய பள்ளிகள் இரண்டினையும் பொதுப்படச் சுட்டி நிற்றல் காணலாம். புத்தநோன்பிகள் வாழும் இடத்தினை ‘மாதவர்.பள்ளி (மணி. 18:8) எனக் குறிப்பிடுவர் சாத்தனார். 'பள்ளி’ என்னும் இச்சொல் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் புத்தர் சமணர் என்னும் புறச்சமயத்தார் தங்குமிடம் என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கப்பெறுவதாயிற்று.

“பொங்கு போதியும் பிண்டியும் உடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை” (திவ்ய. பெரிய. 2.5) எனப் பெரிய திருமொழியிலும், "பள்ளிகள் மேலும் மாடு பயில மண் பாழிமேலும்” (பெரிய சம்பந்தர். 682) எனப் பெரிய புராணத்திலும் இவ்வழக்கு இடம்பெற்றுள்ளமை காணலாம். முதலாம் இராசராச சோழன் ஆட்சியில் நாகப் பட்டினத்தில் கட்டப்பட்ட புத்த விகாரம் 'இராசராசப்பெரும்பள்ளி' எனப் பெயரிடப்பட்டுள்ளமை இச்சொல் வழக்கினை மேலும் வலியுறுத்துவதாகும். இவ்வாறு தம்காலத்தில்