பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நச்சினார்க்கினியர் அவ்வுரையை மறுத்தலால் உய்த்துனரப் படும். தென்னவன் என்ற சொல் இராவணன் என்ற பொருளிலும் தென்றிசைக்கோனாகிய கூற்றுவன் என்ற பொருளிலும் ஒப்ப வழங்குதலால் தென்னவன் என்பதனை இராவணன் எனக்கொண்டு இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்த காலத்து அவனைத் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் அழுத்தி மலைக்கீழடர்த்தருளிய சிவபெருமான் செயலைக் குறிப்பதே ‘தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கட்வுள்' எனவரும் இம்மதுரைக் காஞ்சித்தொடர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

‘தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு

மன்னவன் விரலாலு ன்ற மணிமுடி நெரிய வாயால் கன்னலின் கீதம்பாடக் கேட்டவர்” (4-43-10)

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். தொன்முது கடவுளாகிய சிவபெருமான் வடதிசையிற் கயிலாய மலையிற் கோயில் கொண்டிருப்பது போன்று தென்றிசையிலுள்ள பொதியில் மலையிலும் எழுந்தருளியுள்ளார் என்பது,

“பொதியில்மேய புராணனை” (4-15-10)

எனவரும் அப்பர் அருள்மொழியால் நன்கு தெளியப்படும்.

தமிழகத்து முடியுடைவேந்தராகிய சேர சோழ பாண்டியர்களுள் திங்கள் மரபினராகிய பாண்டியர் மரபில் அங்கயற்கண்ணியம்மை தோன்றினமையால் அம்மரபு அம்மையப்பனாகிய சிவபெருமானது தொடர்பு பெற்ற மரபாயிற்று என்பது திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகளால் உய்த்துணரப்படும். நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல் முதலிய புராணங்கள் காலத்தாற் பிற்பட்டவையாயினும் அவற்றுட் கூறப்படும் இறைவன் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கினுள் கடல் சுவறவேல்விட்டது. இந்திரன் ஆரம்தாங்கியது, மேகத்தைச் சிறைப்படுத்தியது, இந்திரன் முடிமேல் வளையெறிந்தது