பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

353


திரிபுரம் எரித்தது

வானிடத்தே பறந்து திரியும் இயல்பினவாய்ப் பொன், வெள்ளி, இரும்பு என்பவற்றால் இயன்ற மதில்களையுடைய நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அவுனர்கள், தாம் வாழும் நகருடன் விசும்பிற் பறந்து தேவர் முதலியோர்க்கு இடர்விளைத்தனர். திரியும் முப்புரத்து அவுனர்களால் இடருற்று வருந்திய தேவர்கள் வேண்ட அவர்களுடைய துன்பங்களைப் போக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், பூமியைத் தேராகவும், வேதங்களைத் தேரிற்பூட்டும் குதிரைகள்ாகவும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும், இமயமலையை வில்லாகவும், வாசுகியென்னும் பாம்பினை வில்லின் நானாகவும், காற்று, தீ, திருமால் ஆகியோரை ஓர் அம்பாகவும் கொண்டு திரியும் முப்புரங்களையும் தம் புன் சிரிப்பினால் எரித்தருளினார் எனப் புராணம் கூறும், இப்புராணச்செய்தி,

“ஆதியந்தணன் அறிந்து பரிகொளுவ

வேதமாபூண் வையத்தேர் ஊர்ந்து நாகம் நாணா மலை வில்லாக மூவகை ஆரெயில் ஓர் அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப் ப்ாகம் உண்ட பைங்கட்பார்ப்பான்” (பரி. 5, 22-27)

என ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றது.

“நான்முகனாகிய பாகன் தேரைச் செலுத்தும் நெறியறிந்து செலுத்த, வேதங்களாகிய குதிரை பூண்ட தேரையேறி, வாசுகியென்னும் பாம்பு நானாகவும் இமயமலை வில்லாகவும் கொண்டு பொன், வெள்ளி, இரும்பு என்னும் மூவகைப்பட்ட அழித்தற்கரிய மதில்களைத் தீயாகிய ஓர் அம்பினாலே வெந்து நீறாகத் திசைகள் வெதும்ப எய்து அழித்து அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண்ணே அவிப்பாகத்தையுண்ட பசிய இடப்பாகத்தையுடைய ஈசன்” என்பது மேற்குறித்த பரிபாடற் பகுதியின் பொருள். திரிபுரம் எரித்த இச்செய்தி,

சை. சி. சா. வ. 25