பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வழுதி என்னும் வேந்தர் பெருமான் சிவமுனிவர்களால் வழிபடப்பெறும் முக்கட்செல்வராகிய சிவபெருமானை வழிபடும் சிறப்புடைய சிவநெறியினை மேற்கொண்டு, நான் மறைவல்ல வைதிக முனிவர்களை ஆதரித்து அவர்களது நல்வாழ்த்துடன் உலகியலொழுக்கமாகிய வேதநெறியினை வளர்த்தனன். இச்செய்தியினை,

“பணியியரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே இறைஞ்சுக பெரும நின்சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகையெதிரே” (புறம் 6)

என அம்மன்னனைக் காரிகிழார் என்னும் புலவர் பெருமான் உளமுவந்து வாழ்த்திய புறநானூற்றுப் பாடற்பகுதியால் நன்குணரலாம். "நினது கொற்றக்குடை முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருதற்குத் தாழ்க. பெரும நினது முடி மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்க என்று எடுத்த கையின் முன்னே வணங்குக” என்பது இவ்வடிகளின் பொருளாகும். முக்கட் பெருமான் திருக்கோயிலின்றிப் பிற இடங்களிற் பணியாத குடையினை யுடைய இப்பாண்டியன், நான்மறைவல்ல அந்தணர்களாகிய வேதியர்கள் உளமுவந்து வாழ்த்தும் வண்ணம் வேத நெறிப்படி பலவகை வேள்விகளையும் செய்து நிறை வேற்றியவன் என்பது,

“பல்சாலை முதுகுடுமியின்

நல்வேள்வித்துறை போகிய" (மதுரைக். 759, 760)

எனவரும் மதுரைக் காஞ்சியடிகளாலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என இவ்வேந்தனுக்கு வழங்கும் சிறப்புப் பெயராலும் நன்குதெளியப்படும்.

ஆடவல்லான்

சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் படைத்தும் காத்தும் ஒடுக்கியும்