பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மரபினதாகிய உயிர் அறிவுடைப் பொருளாய் என்றும் அழிவின்றி நிலைபெற்ற உள்பொருளாம் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முன்தொடங்கித் தமிழகத்தில் நிலவி வரும் மெய்யுணர்வுக் கொள்கையென்பது முன்னர் விளக்கப் பெற்றது. இத்தத்துவநுட்பத்தினைத் தமிழ் நெடுங் கணக்கினைப் பயிலும் இளஞ்சிறார்களும் எளிதில் உணர்ந்து கொள்ளும் முறையில் தானே இயங்கும் ஒலித்தற்றன்மை யுடைய அகர முதல் ஒளகாரமீறாகிய பன்னிரண்டெழுத்துக் களையும் உயிர் எனவும் உயிர் உள்நின்று செலுத்தினாலன்றி யியங்காத உடம்பினைப் போன்று உயிரெழுத்துக்களின் துணையைப் பெற்றாலன்றி இயங்காத ககரமுதல் னகர மீறாகிய பதினெட்டெழுத்துக்களையும் மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது மெய்யுணர்வுக் கொள்கையே தமிழர் சமயத் தத்துவக் கொள்கைகட்கெல்லாம் வேராக அமைந்த நுட்பமும் முன்னர் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றது.

உடம்பினின்றும் உயிரைக் கவர்ந்து உடம்பையும் உயிரையும் வேறு பிரிக்கும் தெய்வ ஆற்றல் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையுடையவர்கள் தமிழ் முன்னோர் என்பது 'கூற்று’ என்னும் தலைப்பில் முன்னர்க் கூறப்பட்டது. உயிர்கள் பலவென்பதும் உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கூற்று என்னும் தெய்வ ஆற்றல் ஒன்றேயென்பதும்,

“மன்னுயிர்ப்பன்மையும் கூற்றத்து ஒருமையும்

நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய" (புறம், 19)

எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய புறப்பாடலால் அறியலாம். "நிலைபெற்ற உயிரது பன்மையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினது ஒருமை யையும் நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றிவேலை யுடைய செழியனே” என்பது மேற்குறித்த புறப்பாடலடி களின் பொருளாகும். பழையதாய் நின்று தொன்மை யுடையது உயிர் எனவும் அவ்வுயிருடன் கூடி நின்று முதிர்ந்தது உடம்பு எனவும் எனவே உயிரும் உடம்பும் வேறு எனவும் அங்ங்னம் அவை பொருளால் வேறுபட்டன வேனும் கலப்பினால் ஒன்றுபட்டன எனவும் உணர்த்துவது,