பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கரையில் நடப்பட்ட இலக்காகிய கம்பம் காற்றினாற் சாய்ந்து வீழ்ந்தாற்போன்று அம்புகள் பட்டு அவ்விடத்தே வீழ்ந்தது” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். சட்டை கழற்றிய பாம்புக்கும் அதனாற் கழற்றப்பட்ட சட்டைக்கும் சிறிதும் தொடர்பில்லாமை போலத் தேவருலகிற் புக்க வீரனது உயிர்க்கும் அவனது உயிர் பிரிதலால் நிலத்தில் வீழ்ந்து பட்ட உடம்புக்கும் சிறிதும் தொடர்பில்லை யென்பது இத்தொடராற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும்.

“உடம்புந்தோன்றா உயிர்கெட்டன்றே (புறம். 282) என்ற தொடரும் இக்கருத்தினதே.

உயிருக்கு என்றும் அழிவில்லையென்பதும் அருவாகிய உயிர்நிலைத்தற்குரிய உருவாகிய உடம்பு அழியுந்தன்மையது என்பதும், என்றும் அழியாது நிலைத்த உடம்பு இல்லையென்பதும்

"வியாது. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை

மடங்கல் உண்மை மாயமோ அன்றே (புறம். 363)

எனவரும் புறநானூற்றுத் தொடரால் நன்கு துணியப்படும். "நீங்காது ஒருடம்பிலேயே எக்காலத்தும் நிலைபெற்றுள்ள உயிரும் இல்லை, உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்று உண்டென்பது பொய்யும் அன்று” என்பது இத்தொடரின் பொருளாகும். எனவே, மன்னுயிர், ஒருடம்பில் நிலைத்து நில்லாது அவ்வுடம்பினை விட்டிறந்தும் வெவ்வேறு உடம்பினைப் பெற்றுப் பிறந்தும் பிறவிப் பெருங்கடலிற் சிக்குண்டு வருந்தும் இயல்பினது என்பதனை உய்த்துணர வைத்தாராயிற்று.

இவ்வாறு உயிரும் உடம்பும் வேறென்பது தொல்காப்பியனார் காலத்திற்கும் முன்னிருந்து வழங்கிவரும் தமிழர் தத்துவக் கொள்கையாதலின் அக்கொள்கையே சங்கச் செய்யுட்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் தொடர்ந்து நிலைபெற்று வருவதாயிற்று. உயிர் என்பதொன்று இல்லை எனக்கூறும் சூனியான்மவாதமும், தேகமே உயிர் எனக்கூறும்