பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சூழ்நிலையிலேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றினார். தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அயலவர் நுழைவினாற் பரவி வளரும் பல்வேறு சமயக்கொள்கைகளும் தம்முள் முரண்பட்டு மோதித் தமிழகத்தின் பொதுவாழ்விலே பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணாதபடி பல்வேறு சயங்களின் தாக்குதல்களால் விளையும் முரண்பாடுகளை முன்னுணர்ந்து விலக்கக்கருதிய திருவள்ளுவர் எல்லாச் சமயத்தாரும் நன்றென விரும்பியேற்றுக்கொள்ளும் வண்ணம் உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்று பட்டு வாழ்தற்கு இன்றியமையாத மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியருளினார் என்பது திருக்குறளைப்பற்றிய வரலாறாகும்.

மக்களது நல்வாழ்வுக்கு உறுதியளிப்பனவாக உயர்ந்தோரால் உணர்த்தப் பெற்றவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். மக்கட்குலத்தார் தமது வாழ்க்கைக் கடமைகளில் ஈடுபட்டு உழைக்கும்போது தம்மாற் பிறர்க்கு எத்தகைய தீங்கும் நேராதபடி தம்முடைய மனம் மொழிமெய் என்னும் முக்கரணங்களையும் ஒரு நெறிப்படச் செலுத்தும் நல்லொழுக்க நெறியே 'அறம்' எனப்படும். இத்தகைய அறநெறியில் நின்று பொருளைச் சேர்த்து அப்பொருளைக்கொண்டு இன்பம் நுகர்தலே நன்றுந்த்தும் பகுத்துனரும் மனவுணர்வுடைய நன்மக்களின் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை மூன்றன்பகுதி' என்ற பெயராற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தொல்காப்பியனார் குறித்தவண்ணம் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளாக அமைந்த மக்களது நல்வாழ்க்கை முறையினை மூன்று பால்களாக விளக்கும் நோக்குடன் திருவள்ளுவர் அருளிச்செய்த அறநூல் திருக்குறள். அறிவுநலம் வாய்ந்த புலவர் பெரு மக்களால் இயற்றப்பெறும் இலக்கியங்கள் யாவும் வாழ்க்கைக்கு அடிப்படையாகிய அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் மூன்றனையும் தம்மகத்தே கொண்டு அமைதல் வேண்டும் என்பது தமிழ் இலக்கிய மரபம் கும்.