பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"தோலுந்துகிலுங் குழையும் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ”

என மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல் உமையொரு பாகர் திருக்கோலத்தின் எழில் நலத்தினையும் அதன் தொன்மையினையும் விரித்துப் போற்றுதல் காணலாம்.

தமிழகத்தில் மாயோன், சேயோன், கொற்றவை முதலாகப் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும், எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய பரம்பொருள் தன்னை வழிபடும் அன்பர்களின் உள்ளத்திற் கேற்ப மேற்கொண்ட அருள்வெளித் தோற்றமே என்னும் மெய்ம்மையினைத் தெளிந்துணர்ந்தவர்கள் சங்ககாலத் தமிழ் மக்கள். எனவே பல்வேறு வடிவங்களிற் பலவிடங்களிலும் மக்களால் மேற்கொள்ளப்படும் எல்லா வழிபாடுகளும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சார்ந்து பயன் விளைக்கும் என்பது பண்டைத் தமிழ் மக்களது தெளிவான தெய்வங் கொள்கையாய் அமைந்திருந்தது. இவ்வுண்மையை,

வேறுபல்லுருவிற் கடவுட்பேணியும்’

எனவும்,

'ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்

கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேயவேறுவேறு பெயரின்

எவ்வயினோயும் நீயே’

எனவும் வரும் சங்க இலக்கியங்களால் நன்கு துணியப்படும்.

இறைவனைத் தாயுந் தந்தையுமாகக் கருதி வழிபடும் நிலையில் தந்தையினும் தாயினை முந்தி வழிபடுதல்

34. மாணிக்கவாசகர், திருவாசகம், திருக்கோத்தும்பி, 18. 35. பத்துப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, 5. 36. பரிபாடல், திருமால் 67 - 70,