பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

447


நெறியில் நின்று துறத்தலாவது, மெய்ம்மையான ஒழுக்க நெறியில் வழுவாதொழுக அறம் வளரும். அறம் வளரத் தீவினை தேயும். தீவினை தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்கவே நிலையுடையன நிலையற்றனவாகிய பொருள்களது வேறுபாட்டுணர்வும் அழியுந்தன்மையன வாகிய இம்மை மறுமையின்பங்களில் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்றவே வீடு பெறுதலில் விருப்பம் உண்டாகும். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில்லாத முயற்சிகளெல்லாம் நீங்கி வீடுபேற்றிற்குக் காரணமாகிய யோகமுயற்சி யுண்டாகும். அஃதுண்டாகவே மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்ப தும் அகப்பற்றாகிய யான் என்பதும் விட்டு நீங்கும். ஆதலால் இவ்விருவகைப் பற்றுக்களையும் இம்முறையே உவர்த்து நீத்து விடுதலே முற்றத்துறத்தலாகும் என விளக்குவர் பரிமேலழகர்.

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” (திருக். 22)

எனவரும் திருக்குறள், இருவகைப் பற்றுக்களையும் நீத்தாரது பெருமையினை அளவிட்டுரைத்தல் இயலாது என்பதனை அறிவுறுத்துவதாகும். "இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையினை என்னாற் கூறி அறிவிக்கத் தொடங்கின் அளவுபடாமையால் இவ்வுலகத்துப் பிறந்திறந்தார் இத்துணையர் எனக் கூறியளவிட்டுரைத்தாற் போலும் (முடியாத செயலாம்)” என்பது இதன்பொருளாகும். இதன் கண் துறந்தார்’ என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் விட்டொழிந்து வீடுபேற்றின்பத் தின்ை நுகர்தற்குரிய சான்றோர்களை. பெருமை - மிகுதி. இறந்தார் என்றது, இப்பிறப்பிற் பற்று நீங்காது மீளவும் இவ்வுலகிற் பிறந்து வீடுபெறும் நோக்கத்துடன் இருவகைப் பற்றும் நீங்கத் துறவறத்தினை மேற்கொள்ள வேண்டிய பாசப்பிணிப்புடைய உயிர்களை. துறந்தார் பெருமைகூறும் முகத்தால் உயிர்கள் எண்ணிலவா தலையுணர்த்துவது இத்திருக்குறளாகும். இதனடியொற்றி உயிர்களது உண்மையினையும் அவை எண்ணிலவாதலையும் கூறுவது,