பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வருகின்றதெனக் கருதவேண்டியுளது. சிவனும் திருமாலும் பொருளால் ஒன்றே என வலியுறுத்தும் முறையில் அமைந்த சங்கநாராயணர் திருவுருவம், அப்பனாகிய சிவனும் அம்மையாகிய சத்தியும் ஞாயிறும் அதன் கதிரும் போலப் பொருளால் ஒன்றேயென வற்புறுத்தும் உமையொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) திருவுருவ அமைப்பினை அடியொற்றிய தாகும். மாயோன் தங்கை மாயோள் எனவும் நாராயணன் தங்கை நாராயணி யெனவும் காத்தற் கடவுளாகிய திருமாலின் அமிசமாகக் கொண்டு போற்றப்பெறும் கொற்றவை சிவனுக்குரிய கொன்றையும் திருமாலுக்குரிய துளவமும் சேரத் தொடுத்த மலர் மாலையைச் சூடியவளாகவும் திருமால்போன்று ஆழியும் வளையும் ஏந்திய கையின ளாகவும் சிவபெருமானைப் போன்று நஞ்சுண்டு கறுத்த கண்டமுடையவளாகவும் சிவபெருமான் கூற்றிலும் திருமால் நிலையிலும் ஒருங்கு வைத்துச் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றப்பெற்றுள்ளமை காணலாம். சிவனும் உமையும் ஒருவராகத் திகழும் அர்த்தநாரீசுவரர் திருவுருவினைப் போன்றே சிவனுடன் திருமாலையொரு கூற்றினராகக் கொண்டு போற்றும் சங்கரநாராயணர் திருவுருவும் அன்பர்களால் ஒருருவாக இயைத் துப் போற்றப் பெறுவதாயிற்று. சிவ பரம்பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத்தன்மையில் வைத்து வனங்கப் பெறுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றே சிவனும் திருமாலும் என இருமை நிலையில் வைத்து வணங்கப் பெறுகின்றது என்னும் உண்மை மாதொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) மாலொருகூறர் (சங்கர நாராயணர்) ஆகிய திருவுருவ அமைப்புக்களால் இனிது புலனாகும்.

“கிழக்கே விடியற்காலையிலே இளஞ்செவ்வி யுடையதாய்ச் செஞ்சுடர் விரிந்து திகழக் கடலிடையே தோன்றும் ஞாயிறு, தன் கீழுள்ள கடல்நீர் நீலமும் பசுமையும் கலந்த நிறத்தினதாய்த் துலங்கா நிற்பக் கானப்படும் மிக அழகிய காட்சி, அழகேயுருவாகிய இறைவன் எழில்கிளர் தோகையினையுடைய நீலமயிலின்மேல் அமர்ந்து தோன்றினாற் போலும் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தி நிற்றலின், வைகறை விடியலில் மலர்தலையுலகின்