பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

461


முதல்வன் ஒதிய வீட்டுநெறியினை இதுவே நன்னெறி யென்று மனத்துட் கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் கொண்டு அதன்கண் உபாயமாகிய தியானச் சமாதிகளை மனத்தாற் செய்தல் வேண்டும். அங்ங்னம் செய்தால் அநாதியாய் வரும் உடம்பின் பற்றுத் தானே நீங்கிவிடும் என அறிவுறுத்துவது,

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு” (திருக். 350)

எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றுக்குஞ் சார்பாய் நின்று தனக்கென்று ஒரு சார்பு வேண்டாதவன் இறைவன் எனப் பகுத்துணர்த்துவார் அம்முதல்வனைப் பற்றற்றான்' என்றார். துறவற நெறியினை மேற்கொள்ளுதற்கும் அநாதியே வந்த உடம்பின் பற்றினை விட்டொழித்தற்கும் இறைவன் திருவருளே துணை செய்வதாகும் என்பதும், அம்முதல்வனது அருளின்றி இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்தலாகிய துறவறப்பயன் கைகூடாதென்பதும் ஆகிய உண்மைகள் இத்திருக்குறளில் நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை மனங்கொளத் தகுவதாகும்.

மன்னுயிர்கள் பாசப்பினிப்பிற் பட்டுப் பிறத்தலும் அப்பிணிப்பின் நீங்கி வீடு பெறுதலும் ஆகிய இருமை வகையினையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரியின்றி உள்ளவாறுணர்தல் மெய்யுணர்தலாகும். இதனை வடநூலார் தத்துவ ஞானம் என்பர். திருக்குறளில் மெய்யுணர்தல் என்னும் அதிகாரம் தமிழ் முன்னோர் கண்டுணர்ந்த தத்துவ ஞானத்தினைச் சுருங்கச் சொல்லி விளங்கவுணர்த்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

என்றும் நிலைபேறுடைய மெய்ப் பொருளல்லாத வற்றை நிலையான மெய்ப்பொருள் என்று பற்றுச்செய்யும் (விபரீதவுணர்வாகிய) மயக்கவுணர்வானே இன்பமில்லாத பிறப்பு உண்டாவது என அறிவுறுத்துவது,

“பொருளல்ல வற்றைப் பொருளென்றுனரும்

மருளானாம் மாணாப் பிறப்பு” (திருக். 351)