பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் - 613 005 - இந்தியா

முனைவர் இ. சுந்தரமூர்த்தி
துணைவேந்தர்

அணிந்துரை

மக்களை மக்களாக வாழ்விக்கவே எல்லாச் சமயங்களும் முற்படுகின்றன. வாழ்வின் அருமை சமய நெறியினாலே முழுமையாக உணரப்பெறும் என்பதைப் பலரும் நம்புகின்றனர். எனவே, சமய தத்துவ ஆராய்ச்சி மக்கட்குப் பலவகைகளிலும் வேண்டப்படுவதொன்றாகிறது. மனிதனை மனிதனாக வாழச்செய்து தெய்வமாக உயர்த்தும் இப்பணியை மேற்கொள்ளுதல் அறிவுடைப் பெருமக்களின் தலையாய கடமையாகிறது.

தத்துவ உணர்வு வளர்ச்சியடையுமானால், நாட்டில் மக்களிடையே ஏற்படும் பல்வேறு குழப்பங்களும் தீரும். மனம் தெளிவு அடையும். நலங்கள் பல விளையும். இவ்வகையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் மனநிலையை மக்கள் பெற வேண்டும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும்.

"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்டான் துன்பம் உறுதல் இலன்." என்றும்,

"இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்." என்றும் இதனை விளக்குவர்.

இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயற்கையானது என்று தெளிந்தவன் துன்பம் அடைய மாட்டான் என்பதும், இன்பம் வந்தபோது அதை மனத்தான் விரும்பாதவன், துன்பம் வந்த காலத்திலும் அதற்காக மனம் வருந்தமாட்டான் என்பதும் குறட்கருத்துக்களாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே நம் சமய நூல்கள்.