பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

499


எண்ணி வேலனைக் கொண்டு வெறியாடச் செய்கின்றாள். அவள் பேச்சைக்கேட்டு முருகபூசை செய்யும் வேலன் வருவானாயின் அவன் மடமையுடையவனாவனென்றும் அவன் மேற்கொண்டு நிகழ்த்தும் வெறியாடலில் கிரவுஞ்ச மலையைப் பிளந்தவனும் ஆலமர் செல்வன் புதல்வனும் கடப்ப மலர்மாலையை அணிந்தவனும் மலைவாணர் தொழும் கடவுளும் ஆகிய முருகப்பெருமான் வெளிப்படின் நம் நிலையை அவன் உள்ளவாறு அறியாதவனென்றும், அன்பர் மலர்தூவி வழிபடுமிடத்தே எழுந்தருளி வருதல் அவனது அருளின் இயல்பாதலால் அப்பெருமான் வேலனார் வந்து வெறியாடும் இடத்திலே நீலநிறமமைந்த மயிலின் மேலே வள்ளி நாச்சியாருடன் எழுந்தருளி வருதல் திண்னம் என்றும், அவ்வாறு ஆலமர் செல்வன் புதல்வன் எழுந்தருள்வானாயின் அவனை வணங்கி மலைநாட்டுக்குரிய தலைவனது திருமணத்தினை முடித்தருளும்படி வேண்டு வோமாக என்றும் எண்ணிய தோழி, வெறியாட்டு விழாவில் முருகக் கடவுளை நோக்கி, கயிலை மலையில் எழுந்தருளிய

இறைவனுடைய திருமகனே, மலைமகளாகிய உமை யம்மையார் பெற்ற அரும்பெறல் மகனே, ஆறு முகங்களை யுடைய பெருமானே, எங்கள் குல முதல்வியாகிய வள்ளி நாச்சியாருடைய திருவடிகளோடு நின் திருவடி களையும் இறைஞ்சிப் போற்றுகின்றோம். நின் திருவடிகளை வணங்கிச் சூளுரைத்த தலைவர் துன்பமாகிய களவொழுக்கத்தை விட்டொழித்துப் பலர் அறியத் தலைவியைத் திருமணஞ் செய்து வாழ்வாராக’ எனச் செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக அமைந்த குன்றக் குரவைப் பகுதி, வேலன் முருகனை வழிபட்டு வெறியாடும் இயல்பினையும் அதன் பயனையும் வெளிப்படுத்துகின்றது.

இதன்கண் முருகக் கடவுள் தந்தையாகிய இறைவன் ஆலின்கீழ் அமர்ந்து முனிவர்களுக்கு அறமுரைத்தருளியதும், அப்பெருமான் கயிலை மலையில் வீற்றிருத்தலும், மலையரசன் மகளாரை மணந்தருளியதும், மலைமகளாகிய அம்மையார்க்கு முருகன் மகனாகியதும், குறமகளை மணந்து கொண்டருளியதும், ஆறு திருமுகங்களுடன் குறமகளுடன் மயில் மீது எழுந்தருளி அன்பர்க்கு அருள்செய்தலும் ஆகிய