பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



இற்றைக்கு ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முன் மதம் என்ற சொல் சமயக் கொள்கை என்ற பொருளில் வழங்கப் பெற்றிலது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் மணிமேகலையில்தான் ‘சமயம் என்ற சொல் முதன்முதல் ஆளப்பெற்றுளது. கடவுளைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ உயிர்களைப் பற்றியோ மக்கட் குழுவினர் கொண்ட கொள்கையினையும் தாம் தாம் மெய்யெனத் துணிந்துள்ள கொள்கை பற்றிய ஒழுகலாறு களையும் குறித்து வழங்கப் பெறுவதே சமயம் என்ற சொல்லாகும். பண்டைத் தமிழியல் நூலாகிய தொல் காப்பியத்திலும் அதன்பின்னர்த் தோன்றிய சங்கத் தொகை நூல்களிலும் மதம் என்ற சொல்லோ சமயம் என்ற சொல்லோ இடம்பெறவில்லை. பலவகைச் சமயங்களும் தோன்றி அவ்வச் சமயங்களின் பெயரால் தமிழ் மக்கள் தம்முள் தாம் பிரிவுபடுதற்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மையுடையன தொல்காப்பியமும் சங்கத் தொகை நூல்களும் என்பது நன்கு துணியப்படும்.

தொல்காப்பியனார் காலத்திலே மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும் கொற்றவை வழிபாடும் நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவ வழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப்பெற்றது. இவ்வழிபாடுகள் யாவும் பலதிறமக்களும் தம் தம் சூழ்நிலைக்கும் தாம்தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வ வழிபாடுகள் என்ற பொதுமை நெறி என்ற அளவில் நிகழ்ந்தனவேயன்றிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும் அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக் கொள்கையினை யுடைய சமயங்களாக அவை வழங்கப்பெறவில்லை. அதனால் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவை வேறுபட்டுக் காணப்படவில்லையென்பதும் இங்கு மனங்கொள்ளத்தகுவதாகும்.

இனி, கடைச் சங்க காலத்தையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னுங் காப்பியங்களில்தான்