பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

549


கலைகளின் உருவாகத் திகழ்ந்து இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி மன்னுயிர்களுக்கு இன்னருள் சுரப்பவன் கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமானே என்பதனைப் புலப்படுத்துவது, ‘கலையுருவினோன்’ என்ற தொடராகும். "கலையாகிக் கலைஞானந்தானேயாகி (6.94.2) எனவரும் அப்பர் அருள்மொழியும், 'ஐயாறதன்மிசையெட்டுத் தலையிட்டமையில் வான்கலை மெய்யுடன் பொருந்தி’ (திருச்சிற்றம்பலக் கோவை-க பேர் உரை) எனவரும் பேராசிரியர் உரையும் இங்கு ஒப்புநோக்கற் பாலனவாகும்.

கட்புலனாகக் காணப்படும் இவ்வுலகம், தானே தோன்றியதன்று, மன்னுயிர்களின் நலங்கருதி ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனால் தோற்றுவிக்கப்பெற்று உள்ளதாகிய உள்பொருளே என்பதும், சங்கார காரணனாகவுள்ள முதல்வனையே முதலாகவுடையது இவ்வுலகம் என்பதும் சைவசமயத்தின் கொள்கையாகும். இக்கொள்கையினை வலியுறுத்தும் முறையில் அமைந்தது,

"படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்”

என வரும் சைவவாதியின் கூற்றாகும். செம்பிற்களிம்பு போன்று உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள இருளாகிய ஆணவமலத்தினை நீக்குதற்பொருட்டு அருளாளனாகிய இறைவன், உலகு உடல் கருவி துகள் பொருள்களைப் படைத்து உயிர்கட்கு இன்பம் விளைய ஆடல்புரிகின்றான் என்பதும், அம்முதல்வனே உயிர்களின் கன்மமலம் நீங்குதற்பொருட்டு உளதாகிய உலகத்தை ஒடுக்கி உயிர்களின் பிறப்பு இறப்புத் துன்பங்களைத் துடைத்து மன்னுயிர்கட்கு அமைதி வழங்குகின்றான் என்பதும் மேற்குறித்த இரண்டடிகளாலும் முறையே புலப்படுத்தப் பெற்றுள்ளமை உய்த்துணரத் தகுவதாகும்.

தனது விரிவெல்லையினைக் கடந்து தன்னின் வேறாக ஒருபொருளும் இல்லை யென்னும்படி உலகுயிர் களாகிய எவ்வகைப்பொருள்கட்கும் சார்பாயுள்ளவன் இறைவன் ஒருவனே என்பதும், 'தன்னில் வேறுதானோன்று