பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வேதம் ஆகமம் என்னும் இருவகை நூல்களும் இறைவனால் அருளிச் செய்யப்பெற்றன எனவும், வேதம் உலகிய லொழுக்கத்தினை யுணர்த்தும் பொதுநூல் எனவும் ஆகமம் நிலவும் மெய்ந்நெறியாகிய சிவநெறியையுணர்த்தும் சிறப்பு நூல் எனவும் ஆசிரியர் குறித்தலால் இத்திருமந்திர மாலையிற் பொதுவாக வேதநூற் பொருளும் சிறப்பாகச் சிவாகம நூற்பொருளும் எடுத்தோதப் பெற்றன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இந்நூலின் பெரும் பிரிவினைத் தந்திரம் எனவும் இவற்றுள் உள்ள திருப்பாடல் களை மந்திரம் எனவும் வழங்குதல் மரபு. இத்திருமந்திர மாலையின் ஆசிரியர் திருமூலர், உலகிய லொழுக்க நெறியினை விரித்துக் கூறும் பாடல்களில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளிலுள்ள சொற்றொடர் களையும் கருத்துக்களையும ஆங்காங்கே எடுத் தாண்டுள்ளமை காணலாம். இதனைக் கூர்ந்து நோக்குங்கால், தமிழாகமமாகிய இத்திருமந்திரத்திற்கு வேத சிவாகமங்களாகிய இறைவனூற்பொருளேயன்றிப் பண்டைத் தமிழ் நூற்பொருள்களும் மூலமாக அமைந் துள்ளமை இனிது புலனாகும்.

சிவாகமங்களின் ஞானபாதத்தில் உளவாகவும் மலைவுதீர்த்தற் பொருட்டு இறைவர் அருளத் தாம் கேட்டுணர்ந்த நுண்பொருள்களை நந்திபெருமான் சனற்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசித்தருளினார். நந்திதேவர்.பால் உபதேசம் பெற்றவர் திருமூலராகிய சிவயோகியார் நந்திதேவர்.பால் தாம் உணர்ந்த சிவாகமப் பொருளைத் திருமந்திரப் பாடல்களாக்கி அவற்றை ஒன்பது தந்திரங்களாக வகுத்துத் தமிழ்மூவாயிரமாக அருளிச் செய்தார். இத்திருமந்திரமாலை பதி பசு பாசம் என்னும் முப்பொருளுண்மையினையும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்துள்ளது. இவ்வுண்மை,

1. க. வெள்ளைவாரணனார் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு, இரண்டாம் பகுதி, பக்கம் 452 முதல் 456 முடியவுள்ள பகுதி பார்க்க