பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

51


இப்பொருளில் வழங்கப்பெறுவதேயாகும். இவ்வாறே இறைவன் என்பதும் கடவுளைக் குறித்த பெயரேயாகும். யாண்டும் பொருள்கள்தோறும் நீக்கமற நிறைந்து விளங்குதல் கடவுளின் இயல்பேயாதலின் இறை என்பதும் கடவுளைக் குறித்து வழங்கும் பெயரேயாகும். இறை - யாண்டும் நீக்கமறத் தங்கிய பொருள். இறை - இறுத்தல்; தங்குதல், உயிர்ப்பொருள், உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருந்து அவற்றை இயக்கி நிற்கும் முழுமுதற்பொருளையே கடவுள், இயவுள், இறை எனப் பல பெயர்களாலும் தமிழ் முன்னோர்கள் போற்றியுள்ளார்கள். கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயர்களுள் ஒன்றாகிய இறை என்பதன் அடியாகப் பிறந்தது இறைவன் என்பதாகும். இச்சொல் வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவனைப் போன்று, யாவர்மாட்டும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடையனாகி அறவோரை அளித்தும் அறமிலா தாரையொறுத்தும் ஆளவல்ல வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. “செருவகத்திறைவன் வீழ்ந்தென” எனவரும் தொல்காப்பியத் தொடரில் இறைவன் என்ற சொல் நாடாளும் வேந்தனைக் குறித்து நிற்றல் காணலாம். இச்சொல் முதன்முதலிற் கடவுளைக் குறித்த பெயராயிருந்து பின்னர்க் கடவுள் நிலையில் மதிக்கத்தக்க வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. இந்நுட்பம், “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் பெறும்”

என வரும் திருக்குறளால் நன்கு புலனாதல் அறியத் தகுவதாகும். தான் அறநெறியிற் சிறிதும் பிறழாது நின்று தன் குடிமக்களைப் பிறர் நலியாமற் பாதுகாத்தலையும் செய்யும் அரசன், பிறப்பினால் மகனேயாயினும் அவனது செயலின் உயர்வினாலே கண்கண்ட கடவுள் என மக்கட் குலத்தாராற் சிறப்பித்துப் போற்றப்பெறுவான் என்பது இத்திருக்குறளின் பொருளாகும். இதனால் இறையெனப்படும் கடவுள் வேறு மன்னன் வேறு என்பதும் இறையென்பதும் கடவுளைக்

3. திருக்குறள், 388.