பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் நற்றாரமும் ஆமே” (திருமந்: 1178)

எனவரும் திருமந்திரமாகும். “சொல்லையும் நினைப்பையுங் கடந்த மனோன்மணியாகிய அன்னையும், அச்சம் விளைக்கும் பேய்க் கூட்டத்தினையும் ஆக்கம் நல்கும் பூதகணங்களையும் தனக்கு ஏவற் சுற்றமாகவுடைய கன்னிமைப் பருவத்தினளும் ஆகிய பராசத்தி நூலறி வினையும் உயிருணர்வையும் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் சிவபரம்பொருளுக்குத் தாயாகவும் மகளாகவும் நல்ல மனைவியாகவும் திகழ்கின்றாள்” என்பது இத்திருப் பாடலின் பொருளாகும்.

வாய், மனம் என்பன ஆகுபெயராய்ச் சொல்லையும் நினைவையும் குறித்தன. வாயும் மனமும் கடத்தலாவது சொல்லுக்கும் சிந்தனைக்கும் எட்டாது (மாற்றம் மனம் கழிய) அப்பாற்பட்டு விளங்குதல், மனோன்மணி - பெண்பிள்ளை - கன்னி என்பன இறைவியைக் குறித்தன. ஆய்தல் என்றது நூலறிவினையும் அறிவு என்றது உயிருணர்வையும் குறித்தன. அரன் - உயிர்களின் பாசங்களை நீக்குபவன்.

இறைவனும் அவனின் வேறல்லாத திருவருளும் மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டிச் சிவமும் சத்தியுமாகத் திகழ்தல் பற்றிச் சிவமும் சத்தியும் கணவனும் மனைவியும் ஆகவும், சிவதத்துவத்தினின்றும் சத்திதத்துவம் தோன்றும் முறைபற்றி அவ்விரண்டும் முறையே தந்தையும் மகளும் ஆகவும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவத் தத்துவம் தோன்றும் முறைபற்றிச் சத்திதாயாகவும் சதாசிவம் மகனாகவும், சுத்த மாயையினின்றும் இறைவனது ஞான சத்தியின் தூண்டுதலால் சிவதத்துவமும் கிரியா சத்தியின் தூண்டுதலால் சத்திதத்துவமும் முன்னும் பின்னும் ஆக முறையே தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே தமையனாகவும் தங்கையாகவும் இவ்வாறு உலகியற்பிறப்பு முறை உறவில் வைத்து உருவகம் செய்யப் பெற்றன. உலக