பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'ஏற்றுர்தியானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றி னொவ்வாரே

கூற்றக் கணிச்சியான் கண்மூன்றிரண்டேயாம்

ஆற்றலசால் வானவன் கண்'

என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க” என மற்றொருசாரார் கருத்தினையும் இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டியுள்ளமை, திருமாலுடன் மன்னனையுவமித்துக் கூறும் நிலையில் தொல்காப்பியனார் கூறிய பூவை நிலையென்னுந்துறை, திருமாலேயன்றி ஏனைத் தெய்வங்களையும் மன்னரோடு, உவமித்துக் கூறும் முறையிற் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற திறத்தைக் குறிப்பிடுவதாகும். மேற்குறித்த இளம்பூரணருரையினையும் அவர் பிறர் கூறுவதாகக் காட்டிய பிறிதோருரையினையும் மனத்திற் கொண்ட நச்சினார்க்கினியர், இவ்விரண்டுரைகளையும் தொல்காப்பியனார் கருத்தெனவே கொண்டு “மாயோன் விழுப்புகழ்,மேயபெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ் மன்பூவை நிலை” எனக் கொண்டு கூட்டி ‘மாயவனுடைய காத்தற் புகழையும் ஏனோர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னுந் தொழில்களையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலை” என உரைவரைந்து ‘ஏற்றுவலனுயரிய (புறம்56) எனவரும் புறப்பாடலை இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

காடுறையுலகமாகிய முல்லைநிலத்து அலருங் காயம்பூ, நீலமேனி நெடியோனாகிய மாயோனது திருமேனியின் நிறத்தினை நினைவுபடுத்துவதாக லின், பூவையென்னும் அப்பூவினைப் புகழ்தல் மாயோனைப் புகழ்தலாய் அத்தெய்வத்தினது காத்தற்றொழிலைத் தனக்குரிய முறைமையாகக் கொண்ட மன்னனது பெருஞ்சிறப்பினை விரித்துரைக்கும் புறத்தினைத் துறையாயிற்று. மாயோனாகிய தெய்வத்தோடு மன்னனை யுவமித்தலே பூவைநிலை யென்னுந் துறையாமென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். இக்கருத்தினை யடியொற்றியே,