பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆவி உதகத்தாற் கொள்ளுதலாவது, மாணவன் யான் எனது என்னும் செருக்கறுதற் பொருட்டுத் தன்னுடைய உடல் பொருள் உயிர் அனைத்தையும் குருவின் கையில் நீர்வார்த்துக் கொடுக்க, அவர் அவையனைத்தையும் தம் உடைமையாக ஏற்றுக் கொண்டருளுதல் (உதகம் - நீர்) தீக்கையில் நிகழும் இச்சம்பிரதாயத்தினை,

"அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமும்

குன்றேயனையாய் என்னை ஆட்கொண்டபோதே

கொண்டிலையோ'

என வரும் திருவாதவூரடிகள் வாய்மொழியால் நன்குணரலாம்.

திருவருள்வைப்பு என்பது, குருவின் உபதேசத்தின் வழிநின்று முன்னையோரது ஒழுக்கநெறியினைப் பின்பற்றி ஒழுகுவார்க்கு இறைவனது திருவருளே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகவும் உள்ளிடாகவும் வைக்கப்பெற்ற திறத்தை யுணர்த்தும் பகுதியாகும். இறைவன் உயிர்களின் பொருட்டு நிகழ்த்தும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் உயிர்கள் பால் வைத்த திருவருளை நிலைக்களமாகக் கொண்டே நிகழ்வன என்பது,

'அருளிற் பிறந்திட்டருளில் வளர்ந்திட்

டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு துட்டி அருளாலென் னந்தியகம்புகுந்தானே’ (1800)

எனவரும் திருமந்திரத்தால் உணர்த்தப்பெற்றது. “உயிராகிய யான் அருளின் உதவியாற் பிறந்து, அதன் துணையால் வளர்ந்து, (கன்மத்தால் பிறந்தும் இறந்தும் அலைப்புண்ட அயர்வுநீங்க) அருளால் ஒடுங்கி இளைப்பாறி, (இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்தற்பொருட்டு அவ்வருளால் மறைக்கப்பட்டு நின்றநிலையில் என் குருநாதனாகிய சிவபெருமான் தனது திருவருளாகிய இன்பமயமான நிறைந்த அமுதத்தை உண்பித்துத் தனது திருவருளால் என் அகத்துட்புகுந்து என்னுள்ளமே கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான் என்பது இதன் பொருளாகும்.