பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்ற தலைப்பில் எடுத்துக்காட்டப் பெற்றன. பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகிய திருமந்திரத் தொடர்களும் கருத்துக்களும் ஏனைய பதினொரு திருமுறைகளிலும் இடம் பெற்றுள்ளமை திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் என்ற தலைப்பில் எடுத்துக் காட்டப்பெற்றது."

திருமந்திரமும் மெய்கண்டநூல்களும்

திருமூல தேவநாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திரமாலை என்னும் இப்பனுவல், தமிழகத்தில் தோன்றி வளர்ந்த சைவ சித்தாந்தத் தத்துவவுண்மைகளை விரித்து விளக்கும் சாத்திரநூலாகவும் சைவநெறியில் ஒழுகிச் சிவபரம்பொருளை மனமொழி மெய்களால் வாழ்த்தி வழிபடுதற்குச் சாதனமாகிய தோத்திர நூலாகவும் விளங்கும்தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததாகும். சைவ சித்தாந்தத் தத்துவவுண்மைகளை விளக்கும் நிலையிற் பிற்காலத்துத் தோன்றிய திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கிற்கும் முதல்நூலாகத் திகழ்வது தமிழாகமமாகிய இத்திருமந்திரம்ேயாகும். என்றும் மாறா வியல்பினதாகிய மெய்ப்பொருளை மாறுந்தன்மையவாகிய ஏனைய உலகப் பொருள்களினின்றும் பிரித்துக் கானும் மெய்யுணர்வினை வழங்கவல்லன மேற்குறித்த சைவ சித்தாந்த சாத்திரங்களாதலின் இவை மெய்கண்டநூல்கள் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவனவாயின.

சிவஞானம் பெற்ற நல்லுயிர் தன் உடம்பையும் கருவி கரணங்களையும் ஏனைய தத்துவங்களையும் தன்னின் வேறாகப் பகுத்துணர்ந்து என்றும் மாறாதுள்ள சிவ பரம்பொருளே மெய்ப்பொருள் எனக் கண்டு தெளியுமாயின் அவ்வுயிர் மெய்கண்டது எனச் சிறப்பித்துப் பாராட்டப் பெறுவதாகும். இந்நுட்பம்,

1. க. வெள்ளைவாரணன், பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதி,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 1969, பக். 452-456. 2. மேலது. பக். 457-478.