பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சாத்திரங்கள் பதினான்கும் சைவத்திருமுறைகளின் பயனாகத் தோன்றிய செந்தமிழ்த் தத்துவநூல்களாகும். திருமுறை களின் பயனாகத் தோன்றியனவே இச் சைவசித்தாந்த சாத்திரங்கள் என்பது திருமூலநாயனார் அருளிய திருமந்திரப் பொருளை இந்நூல்கள் எடுத்தாண்ட திறத்தினை விளக்கு மிடத்து நன்கு எடுத்துக்காட்டப்பெற்றது. அவ்வாறே தேவாரத் திருமுறைகளில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை வேரூன்றி விளங்குந் திறத்தை இங்கு ஒரு சிறிது நோக்குதல் ஏற்புடையதாகும்.

தேவாரத் திருமுறைகளிற் சைவசித்தாந்தம்

மூவாதபேரன்பின் மூவர் முதலிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப் பெறும் பொருள்கள் பற்றிச் சிவநெறிச் செல்வர் பலர் பலதிறமாகப் பகுத்துச் சிந்தித்துள்ளார்கள். வித்தகப்பாடல் முத்திறத் தடியரும் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதனையும் நாடோறும் ஓதி மகிழ விரும்பிய சிவாலய முனிவர் என்பவர்க்குப் பொதியின் முனிவராகிய அகத்தியர், மூவர் திருப்பதிகங்களிலுமிருந்து இருபத்தைந்து பதிகங் களைத் திரட்டித்தந்து, அத்திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணஞ் செய்வோர் மூவர் தேவாரப்பதிகங்கள் முழுவதனையும் ஒதிய பெரும்பயனைப் பெறுவர் என அறிவுறுத்தி மறைந்தருளினார் என்றதொரு வரலாறு செவிவழிச் செய்தியாக வழங்கப்பெற்று வருகின்றது. அகத்திய முனிவர் சிவாலய முனிவர் பொருட்டுத் திரட்டித் தந்த தேவாரப் பதிகங்கள் இருபத்தைந்தும் அகத்தியர் தேவாரத்திரட்டு என்ற பெயருடன் பாராயணஞ் செய்யப் பெற்று வருவதனை அறிஞர் பலரும் நன்குனர்வர்.

அகத்தியர் தேவாரத்திரட்டில், தேவாரத் திருப்பதிகங் களின் திருவுள்ளக்கிடையாகக் குருவருள், திருவெண்ணிறு (பரையின் வரலாறு), அஞ்செழுத்துண்மை, கோயிற்றிறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அடிமைநிலை என்னும் எண்வகைப் பொருட் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.