பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

65


பெயர்த்தாயிற்று. இவ்வாழ்த்தியல் துள்ளலோசைத்தாகிய கலிப்பாவிலும் தூங்கலோசைத்தாகிய வஞ்சிப்பாவினும் பாடப் பெறாது. இவையொழிந்த பாவினுள் வரும் என்பதனை,

“வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா"

என வருஞ் சூத்திரத்தால் ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துள்ளார். எனவே இப்புறநிலைவாழ்த்துப் பொருண்மை வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் கலந்த மருட்பாவினும் தொல்காப்பியனார் காலத்திற் பாடப்பெற்றதென்பது நன்கு தெளியப்படும். இச்சூத்திரத்தில் வாழ்த்தப் பெறுவோனை நிற்புறங்காப்ப என முன்னியொருமையிற் கூறி வாழ்த்தியல் முடியில் “பொலிமின்’ என முன்னிலைப் பன்மையாற் கூறியதன் நோக்கம், வாழ்த்தப் பெறுவோனது வாழ்வின் சிறப்பியல்பு அவனுடைய சுற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய தாதலின் அவனை மட்டும் வாழ்த்துமளவில் நின்று விடாது அவனுடைய மனைவி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தாரொடுங்கூட்டி 'நீடுவாழ்மின்’ எனப் பன்மை நிலையில் வாழ்த்திப் பாடுதல் வேண்டும் என்னும் புலமை நெறியினை அறிவுறுத்தல் கருதியதாகும். இவ்வாறு புறநிலைவாழ்த்தின் இலக்கணங்கூறுமுகமாகக் கடவுள் வழிபாட்டால் மக்கட் குலத்தார்க்கு உளவாகும் நற்பயன்களைத் தொல்காப்பியினார் அறிவுறுத்திய திறம் உளங்கொளற்பாலதாகும்.

வழிபடுதெய்வத்திற்குத் திருவுருவமைத்து அத்திரு வருவத்தின் முன்னின்று பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செழும்பாடல்களாற் போற்றிப் பரவுதல் தமிழ் முன்னோர் மேற்கொண்டொழுகிய வழிபாட்டு முறையாகும். அங்ங்ணம் முன்னிலைக்கண் நின்று தெய்வத்தைப் பரவிப் போற்றுதற்கு வாய்ப்பாகிய யாப்பமைதியுடைய செய்யுள் கலிப்பாவகை 10. தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல், 106.

கை. கி. ரா. .ை 5